ராஜாதிராஜா என பெயர் வைத்து ரஜினியின் தர்மதுரை பாதிப்பில் எடுத்திருக்கிறார்கள் படத்தை. லாரன்சின் உச்சரிப்பு முதல் உடலசைவு வரை அனைத்திலும் ரஜினி... ரஜினி...
கிடைக்கிற வேலை செய்து அண்ணன்கள் மூவரையும் பெரிய ஆளாக்குகிறார் லாரன்ஸ். அப்பாவின் கடைசி ஆசையாம். ஆனால் அவர்கள்...? ஏழைகளுக்கு உதவுவார்கள் என்று பார்த்தால் சமூகத்தை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுகிறார்கள் மூவரும். அவர்களுக்கு பார்ட்னர் கஞ்சா விற்று மினிஸ்டராகும் மும்தாஜ். நால்வரையும் அவர்கள் ரூட்டிலேயே சென்று நளபாகம் செய்கிறார் லாரன்ஸ்.
webdunia photo
WD
மூணு வரி கதைக்கு முள்ளங்கி பத்தையாக மூன்று ஹீரோயின்கள். முதல் பகுதி மீனாட்சிக்கு என்றால் இரண்டாம் பகுதியை பங்குப் போட்டுக் கொள்கிறவர்கள் ஸ்னிக்தாவும், காம்னாவும். இவர்கள் தொப்புளை போகஸ் செய்வதிலேயே குறியாக இருக்கிறது சுரேஷ் தேவனின் கேமரா.
படத்தின் சவுண்ட் பார்ட்டி கருணாஸ். பாடலும் பின்னணி இசையும் இவர்தானாம். பார்த்து கண்ணா... பறக்கிற ஆசையில் இருக்கிறதை விட்டுரப் போறீங்க. கருணாசுடன் இணைந்து லாரன்ஸ் தனது அண்ணன்களுக்கு தரும் டெலிபோன் ட்ரீட்மெண்ட் கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸியம். அதைவிட அரிவாள் முனையில் நடக்கும் நாட்டாமை மகள்கள் திருமணம் படு ஜோர்.
ஆ.. ஊ.. என்றால் சேலையை உருவிப்போட்டு பன்ஞ் டயலாக்காக உறுமுகிறார் மும்தாஜ். சொந்தக் குரல் வேறு. சோதிச்சிட்டீங்க தாயீ. இழுத்து விடுகிற சிகரெட் புகையில் மட்டும் யதார்த்தமோ யதார்த்தம். நடனத்தில் தனிப் பாணியை பின்பற்றும் லாரன்ஸ் நடிப்பிலும் அதை தொடர்ந்தால் நலம். அண்ணன்களில் போஸ் வெங்கட் தேறுகிறார்.
இறக்கும் தருவாயில் அண்ணன்களை பெரிய ஆளாக்கு என கடைசி மகனிடம் சத்தியம் வாங்கும் அப்பா, பப்ளிக்காக தலையில் ஆப்பு அடித்து கொலை செய்யும் போலீஸ், கக்கூஸ் அருகில் கஞ்சா விற்று மந்திரியாகும் பெண்... லாஜிக்கை லாரி ஏற்றி அனுப்பியிருக்கிறார் இயக்குனர். எஞ்சுவது ராணிகளின் கவர்ச்சி ஆட்டம் மட்டுமே.
கதையில் கோட்டைவிட்டு கவர்ச்சி கறிவேப்பிலையை தூவியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். மணக்கும் என்று நினைத்திருப்பார்... கசப்போ கசப்பு.