ஏதேனும் துறையில் பிரபலமாக இருப்பவர்களிடம் 'கடவுள் உங்கள் முன் தோன்றினால்...?' என்று கேட்கப்படும் ஒரு கேள்விக்கான பதில்தான் இந்தப் படம்.
பெரிய ஹீரோ இல்லை. அனல் பறக்கும் சண்டைக் காட்சியில் நூறு பேர் தெரி விழுவதில்லை. சிங்கப்பூர், மலேசியா, கனடாவிலிருந்து வில்லன்கள் யாரையும் இறக்குமதி செய்யவில்லை. அனைவரும் நாம் பல படங்களில் பார்த்த (காமெடி) முகங்கள் என்பதால் அவர்களை பார்த்ததுமே நமக்கு சிரிப்பு வருகிறது.
காபிக்கு காசு இல்லை என்றாலும், காதல் நிறைவேறவில்லை என்றாலும், அடி பம்பில் தண்ணீர் வராதது முதல் நல்ல வேலை கிடைக்காதது வரை எதுக்கெடுத்தாலும் கடவுளைத் திட்டும் இரண்டு நண்பர்கள் (சந்தானம் - கஞ்சா கருப்பு). பெரும்பாலான காட்சிகள் மேன்ஷனில் என்றாலும் அலுப்புத் தட்டவில்லை. அப்படி திட்டுவதைக் கேட்டு ரோஷம் பொத்துக்கொண்டு அவர்கள் மேன்ஷன் அறைக்கு வருகிறார் கடவுள் (பிரகாஷ் ராஜ்).
நான்தான் கடவுள் என்று பிரகாஷ் ராஜ் சொல்லியும் நம்பாத நண்பர்களுக்கு ராமர், ஏசு, புத்தராக காட்சி தருவது அழகான கற்பனை. அப்படி வரும் கடவுள் 'நான் யாரென்று மூன்றாம் நபருக்குத் தெரியக்கூடாது. அதேபோல், பண உதவியும் செய்யமாட்டேன் என்று சொன்னாலும், அடுத்த ஒன்றிரண்டு சீன்களிலேயே அடுத்தவருக்கும் தெரிகிறது, பண உதவியும் செய்கிறார் கடவுள்.
பின் கடவுளுக்கு சக்தி தருவது கேலக்ஸி டிஸ்க்தான் என்பதை அறிந்துகொண்ட சந்தானம் - கஞ்சா கருப்பு இருவரும் அந்த கேலக்ஸி டிஸ்கை திருடிக் கொண்டு எஸ்கேப் ஆக, அவரவர்களுக்கு அவர்களேதான் பலம் என்பதை உலகுக்கும், நண்பர்களுக்கும் பாடம் சொல்ல வந்த கடவுளின் பவரே பறிபோகிறது. அதனால் சராசரி மனிதனாகிறார் கடவுள் பிரகாஷ் ராஜ்.
|