ஆர்யா, பூஜா, லால், ஜான் விஜய், அஸ்வினி, நெல்லை சிவா, தம்பி ராமையா நடிப்பில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஏ.பி. பிலிம் கார்டன்.
சென்னையில் மெக்கானிக் ஷெட் வைத்து கொடிகட்டிப் பறப்பவர்கள் லால் மற்றும் ஜான் விஜய். லாலின் பெயர் பிகிலு, ஜான் விஜய்யின் பெயர் சன் ஆப் கன். இருவருக்குள்ளும் தொழில் முறையில் போட்டி உண்டு. அவ்வப்போது ஆட்டோ ரேஸ் விட்டு இருவர் அணிகளுக்குள் போட்டி - பந்தயம் வைப்பது உண்டு. லாலுக்காக ரேஸில் லுட்டி ஆர்யா ஜெயித்து வருவதும் ஜான் விஜய் கோஷ்டி மண்ணைக் கவ்வுவதும் வழக்கம். ஆனால் ஆர்யா பூஜாவின் காதலில் விழுந்த பிறகு இது இறங்கு முகமாகி விடுகிறது. எல்லாவற்றையும் அடமானம் வைத்து கையிலிருந்த ஆட்டோ, ஷெட் எல்லாம் இழந்து லாலும் ஆர்யாவும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறார்கள். இறுதியில்.... ? ஹீரோ ஜெயிக்க வேண்டுமே... ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது. ஆர்யாவும் லாலும் புது ஆட்டோ வாங்குகிறார்கள். ஆர்யா- பூஜாவும் தம்பதி ஆகிறார்கள் சுபம். இதுதான் ஓரம்போ படக்கதை.
ஆட்டோ ஷெட்... மெக்கானிக் வாழ்க்கை இஞ்சின் உதிரிப் பாகங்கள் ஸ்பேனர் என்று நம்மை அந்த சிந்தாதிரிப் பேட்டை ஏரியாவுக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்து விடுகிறார்கள். நாமும் ஆயில் கிரீஸ் ஒட்டிக் கொள்ளுமோ என்று பயந்து ஒடுங்கி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் அளவுக்கு ஆட்டோ ஷெட்.... சூழலை உணர வைத்துவிடுகிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி இருவரும்.
ஆட்டோதான் உலகம் என்றிருக்கும் அவர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறையை கண் முன் நிறுத்துகிறார்கள். அப்படி அவர்களுக்குள் ஹீரோயிசத்தை நிரூபிக்க நடைபெறும் ஆட்டோ ரேஸ் காட்சிகள் பரபர... விறுவிறு... ஆனால் 120 கி.மீ.வேகத்தில் ஆட்டோ ஓட்டுவது சாத்தியமா... அனுமதி உண்டா என்பது கேள்விக்குரியது. அது வேறு விஷயம்.ஆனாலும் அந்த ரேஸ் ஏற்படுத்தும் பரபரப்பு விர்ரென்று விறுவிறுப்பாகவே இருக்கிறது. படத்தின் விறுவிறுப்புக்கு நீரஷ்ஷாவின் கேமரா பலமாக உதவியிருக்கிறது.
ஆர்யா லால் சார்பில் ஆட்டோ ஓட்டுவார். ரேஸில் ஜெயிப்பார். வருகிற பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து குடித்து அழிப்பார். வீட்டிலிருக்கும் அக்கா அஸ்வினிக்கு தினம் 100 அல்லது 200 கொடுத்து உதவாக்கரை என்று திட்டு வாங்குவார். இடையில் பூஜா மீது கண் வைத்து காரியம் ஆனதும் கழற்றிவிடுகிறார். ஏன் என்றால் பெண் என்றால் யூஸ் அன்ட் த்ரோ என்பது அவர் கொள்கை. ஆர்யாவுக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை. இருந்த வாய்ப்பையும் கோட்டை விட்டு இருக்கிறார்.
|