தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் சிகரத்தைத் தொடலாம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அப்படி பல இளைஞர்கள் இன்று சினிமாவில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு என்று மட்டும் இல்லாமல் பல்வேறு நாட்டிலிருந்தும் படை எடுகின்றனர். அந்த வகையில் கொடைக்கானல் படத்தில் அதிரடி வில்லனாக அறிமுகமாகிறார் காண்டீபன். மலேசியத் தமிழரான இவரை நமது வெப்.துனியாவுக்காக சந்தித்தோம்.
உங்களுடைய சொந்த ஊர் எது?
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மலேசியாவில்தான். என்னோட தாத்தா ஊர் அதாவது பூர்வீகம்னு பாத்திங்கன்னா தமிழ்நாடு திருச்சிதான். கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு முன்னாடியே எங்கப்பா மலேசியாவுக்கு வந்துட்டார். அதனால நான் பிறந்தது, படிச்சது எல்லாமே மலேசியாதான்.
சினிமாவுக்கு வரவேண்டும் என்று சின்ன வயது முதல் ஆர்வம் இருந்ததா?
படிக்கிற வயசுல இல்லை. ஆனா பள்ளிக்கூடத்துல மாறுவேடப் போட்டி, டான்ஸ், நாடகம்னு மேடை ஏறியிருக்கேன். அப்படி ஆரம்பத்துல இருந்து மேடை ஏறின ஆர்வம்தான் கல்லூரி படிக்கிறப்போ நாமும் சினிமாவுல நடிக்கலாமேன்னு தோணுச்சி. அதுக்கப்புறம்தான் இந்த 'கொடைக்கானல்' படத்தோட வாய்ப்பு கெடைச்சது.
இந்த கொடைக்கானல் வாய்ப்பு உடனே கிடைத்ததா, பல தேடலுக்குப் பின் கிடைத்ததா?
இந்தப் படத்தோட வாய்ப்பே தேடாமத்தான் கெடைச்சது. 'கொடைக்கானல்' படத்தோட இயக்குனர் டி.கே. போஸ். என்னோட மாமா மலேசியா வாசுவுக்கு நெருங்கின நண்பர். ஒரு நாள் ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது ஒரு படம் ஆரம்பிக்கப் போறதாவும், அதுக்கு ஒரு வில்லன் தேவைப்படுவதாகவும் சொல்ல, உடனே என்னை சொல்லியிருக்கிறார். அப்படி கிடைச்சதுதான் இது. இதுக்குப் பின்னாடி இன்னும் தீவிரமா முயற்சி பண்ணி இருக்கேன்.
இனி நடிக்க அடிக்கடி இந்தியா வருவதால் உங்களின் மற்ற வேலைகள் பாதிக்கப்படாதா?
பாதிக்காத அளவுக்குத்தான் அங்கிருந்து வருவேன். படிச்சது இன்ஜினியரிங். அதனால எப்போ வேனாலும் அதைத் தொடர்ந்து செய்யலாம். ஆனா நடிப்பு அப்படியில்ல. அந்தந்த வயசுலதான் நடிச்சுப் பேர் வாங்க முடியும். அதுவுமில்லாம என்னோட அண்ணன்கள் எல்லாருமே சொந்தமா மலேசியாவுல பிஸினஸ் பண்ணிட்டு இருக்கிறதால என்னோட வருமானத்தை பெரிசா எடுத்துக்கிறதில்லை. அதனாலதான் சினிமாவுல அதிகம் முயற்சிக்கலாம்னு வந்திருக்கேன்.
அண்ணன்கள் சொந்த தொழில் செய்யும்போது உங்களையும் பிஸினஸ் செய்யச் சொல்லாமல் சினிமாவில் நடிக்க எப்படி அனுமதித்தார்கள்?
அதுக்கு காரணம் வீட்டில் நான்தான் கடைகுட்டி. கடைசிப் பையன்கிறதால எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து நீ என்ன ஆசைப்படறியோ செஞ்சுக்கோன்னு சொல்லிட்டாங்க. சொல்லப்போனா அவங்களோட முழு ஆதரவு எனக்கு இருக்கு. அப்பா கருப்பையா, அம்மா தவமணி அவங்க இருந்தா எந்த அளவுக்கு எனக்கு ஆதரவா இருப்பாங்களோ அந்த அளவுக்கு என்னோட அண்ணன்கள் இருக்காங்க.
முதன் முதலா கேமரா முன்னால் நிற்கும்போது எப்படி உணர்ந்தீர்கள்?
சினிமா கேமராவுக்கு முன்னாடி இப்பதான் நிக்கறேனே தவிர, டி.வி. கேமரா முன்னாடி நிறைய தடவை நின்னுட்டேன். மலேசிய கவர்மெண்ட் டி.வி.யில வந்த சீரியல்கள்ல கிட்டத்தட்ட 232 நாடகத்துல நடிச்சிட்டேன். அதுக்காக 2006 ஆம் வருஷத்துக்கான சிறந்த ஹீரோ விருது வாங்கியிருக்கேன். மலேசியக் கலைஞர்களோட பாராட்டும், வாழ்த்தும் பெரும் அளவுல கெடைச்சது. அந்த விழா என் வாழ்க்கைல மறக்க முடியாது.
|