வ. கெளதமன் தான் படைக்கும் ஒரு படைப்பு, தான் சார்ந்துள்ள சமூகத்தின் முன்னேற்றத்தை ஒரு அங்குலமாவது உயர்த்துவதாய் அமைய வேண்டும் என்ற நோக்கமும், எண்ணமும் கொண்ட படைப்பாளிகளின் வரிசைகளில் குறிப்பிடத்தக்கவர்.
"கனவே கலையாதே" படத்தின் இயக்குநரான இவரது ஆட்டோ சங்கர் தொடரும், தற்போது வெளிவந்துகொண்டுள்ள சந்தனக்காடு தொடரும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்வுகளை உண்டுபண்ணியுள்ளது. திரைப்படங்கள் குறித்தும், தனது தொடர்கள் குறித்து கெளதமன் அளித்த பேட்டியிலிருந்து...
ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கும், தொலைக்காட்சி தொடர் இயக்குவதற்குமான வித்தியாசங்களாய் எதைச் சொல்லுவீர்கள்?
என்னைப் பொறுத்தவரை ஒரு வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்லுவேன். இரண்டையுமே நான் என்னுடைய படைப்பாக, பங்களிப்பாகத்தான் பார்க்கிறேன். இதில் எந்தவித பாகுபாடும் எனக்கில்லை. நாம் சரியான விதத்தில் கொடுத்தோமானால் பார்வையாளனும் இதில் வித்தியாசம் பார்க்கமாட்டான். என்னைப் பொறுத்தமட்டில் ஒரு சதவீதம் கூட திரைப்படத்துக்கும், தொடருக்கும் ஒரு இயக்குநர் வித்தியாசம் பார்க்கக்கூடாது என்பது என் கொள்கை.
ஆட்டோ சங்கர், வீரப்பன், போன்றவர்கள் வில்லன்களாக, எதிர் பண்புகள் கொண்டவர்களாக மக்கள் மத்தியில் சித்தரிக்கப்பட்டவர்கள். இவர்களைப் பற்றிய கதையை செய்வதில் உங்களுக்கு தயக்கம் இருந்ததா?
கொலை செய்பவனைவிட, அந்தக் கொலையை செய்யத் தூண்டுபவன்தான் குற்றவாளி என்கிறது சட்டம். அப்படிப் பார்க்கையில் ஆட்டோ சங்கரும், வீரப்பனும் உருவாகக் காரணமாக இருந்தது என்ன? அதுபோன்ற காரணங்கள் என்ற கள்ளிச் செடிகள் களையப்பட வேண்டாமா என்ற நோக்கத்தின் அடிப்படையில் யோசித்தபோது, நீங்கள் கேட்ட தயக்கம் என்னிடமிருந்து தகர்ந்து போனது.
என்னதான் இருந்தாலும் கொலைகளும், குற்றங்களும் புரிந்த குற்றவாளிதானே வீரப்பன்?
வீரப்பன் செய்த கொலைகளுக்கும், சில அட்டூழியங்களுக்கும் நான் வக்காலத்து வாங்கவில்லை. எனக்கும் இதில் உடன்பாடு இல்லைதான். ஆனால், "சந்தனக்காடு" தொடருக்காக நானும், சந்தனக்காட்டுக்கு வசனம் எழுதியுள்ள பாலமுரளிவர்மனும் களப்பணியில் ஈடுபட்டோம். அப்போது நாங்கள் சந்தித்த வீரப்பனின் கூட்டாளிகள், ஊர் மக்கள், வீரப்பனுக்கு ஆதரவான, எதிரான காவல் துறையினர், அரசு அதிகாரிகள் அவ்வளவு ஏன்? வீரப்பனின் எதிரிகள் சொன்ன விஷயங்கள், சம்பவங்கள் எங்களுக்கு வீரப்பனின் வேறொரு முகத்தை காட்டியது.
|