உதவி இயக்குனரின் கதையை திருடி சூப்பர் ஸ்டாராகும் நடிகர். அவர்முன் கைகட்டி நிற்கும் இயக்குனர், தயாரிப்பாளர். திரைக்குப் பின்னுள்ள இந்த நிஜங்களை வெள்ளித்திரையில் வெளிச்சமிட்டு காட்டியவர் இயக்குனர் விஜி. சின்ன விமர்சனத்துக்கே சிலிர்த்துக்கொண்டு தெருவில் இறங்கும் கோடம்பாக்கத்தில் விஜியின் வெள்ளித்திரை ஓர் ஆச்சரியம். தமிழ்.வெப்துனியா.காம் அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து...
அள்ளித்தந்த வானம் படத்திற்குப் பிறகு ஏன் இத்தனை வருட இடைவெளி?
அள்ளித்தந்த வானம் பரவலாக எல்லா சென்டர்களிலும் அறுபது நாள் ஓடிய படம். ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம். ஒரு படத்தை எப்படி வியாபாரம் பண்ணணும்னு அவருக்கு தெரியலை. படத்தை இயக்குவதுடன் அதன் பிஸினஸ் பத்தியும் ஒரு இயக்குனர் தெரிஞ்சு வச்சிருக்கணும் என்று அள்ளித்தந்த வானம் அனுபவத்திலிருந்து தெரிஞ்சுகிட்டேன். அதுதான் கொஞ்ச நாள் படம் இயக்குவதிலிருநூது ஒதுங்கி இருந்தேன்.
படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்தது எப்படி?
நண்பர்களுக்காக எழுத ஆரம்பித்ததுதான் வசனம்.
இனிமேல் இயக்கம்தான், வசனம் எழுதமாட்டேன் என்று சொல்லியிருக்கீங்க...?
படம் இயக்க வாய்ப்பு வரும்போது ஏன் வசனம் மட்டும் எழுதணும்?
அப்படின்னா வசனம் எழுதுவதை இரண்டாம் பட்சமாக கருதுகிறீர்களா?
அப்படி இல்லை. அடுத்தவங்க கதைக்கு டயலாக் எழுதுறது சாதாரண விஷயமில்லை. ஆழமான சினிமா அறிவு இருந்தா மட்டும்தான் எழுத முடியும். ஆனா அறிவு இல்லாமலே படம் இயக்க முடியும்.
வெள்ளித்திரையில் நீங்கள் வசனம் மட்டும் எழுதுவதாக இருந்ததாகவும், பிறகுதான் அதனை இயக்கும் பொறுப்பு உங்களிடம் கொடுக்கப்பட்டதாகவும் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறாரே...?
வசனம் மட்டுமில்லை, திரைக்கதையும் நான்தான் எழுதினேன். அதை வைத்து யார் வேண்டுமானாலும் டைரக்ட் பண்ணலாம். நான் டைரக்ட் பண்ணலைனுதான் சொன்னேன். அது ரொம்ப ஆழமானதாக இருக்கு என்பதால், மற்றவர்களை வைத்து செய்தால் சரியாக வராது என்பதால் என்னையே இயக்குமாறு கூறினார்கள். உண்மையில் விருப்பமில்லாமல்தான் வெள்ளித்திரையை டைரக்ட் பண்ணினேன்.
வெள்ளித்திரையில் மிகை நடிப்பைப் பற்றிய வசனம் வரும். பிருத்விராஜ், மார்லன் பிராண்டோ போன்ற நடிகர்களின் பெயரைச் சொல்வார். பதிலுக்கு பிரகாஷ்ராஜ், வெளிநாட்டுக்காரன் அம்மா இறந்தாலும் வேடிக்கைதான் பார்ப்பான். ஆனால், இங்கு நெஞ்சில் அடித்து அழுவான் என மிகை நடிப்புக்கு ஆதரவாக பேசுவார். உண்மையில் நீங்கள் யார் தரப்பை ஆதரிக்கிறீர்கள்?
நாடக நடிப்புங்கிறது வேறு, சினிமா நடிப்புங்கிறது வேறு. இங்க வசனம்னா வீரபாண்டிய கட்டபொம்மன் அல்லது திருவிளையாடல். நடிப்புன்னா, ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதா. ஆனா, சினிமா நடிப்பு வேறுபட்டது. கல்லூரி மாணவன் கேரக்டர்னு சொன்னதும் பிரகாஷ்ராஜ், பதினைஞ்சு கிலோ எடையைக் குறைச்சிட்டு வர்றேன்னு சொல்வார். பதிலுக்கு பிருத்விராஜ், அப்படின்னா இன்னும் பதினைஞ்சு கிலோவை குறைச்சா குழந்தை நட்சத்திரமா நடிப்பியானு கேட்பார். இன்னைக்கு சினிமாவுல இதுதானே நடந்துகிட்டிருக்கு. பிரதிவிராஜ் தேடுவது ஒரு சினிமா நடிகனை. இங்கு நாடக நடிகர்கள் அதிகம், சினிமா நடிகர்கள் மிகக் குறைவு.
|