பட்டாம்பூச்சாய் படபடக்கும் கண்கள் மெழுகு பொம்மை போன்ற உடல்வாகு என ரசிகர்களை கிறங்கடிப்பவர் காம்னா ஜெத்மலானி. "இதயத் திருடன்" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களைத் திருடியவர், "மச்சக்காரன்" மூலம் மறு ரவுண்ட் வர இருக்கிறார். இனி காம்னா.
இதயத் திருடனுக்குப் பிறகு எங்கே போனீர்கள்?
நான் எங்கும் போகவில்லை. வீட்டில் சும்மாவும் உட்கார்ந்திருக்கவில்லை. இந்த இடைவெளியில் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்தேன். இப்போது "டாஸ்" படம் உள்ளது. தெலுங்கு மட்டுமல்ல கன்னடத்திற்கும் போய் விட்டேன். ரவிச்சந்திரன் ஜோடியாக நான் நடித்த கன்னடப் படம் "யுகாதி" விரைவில் வெளிவர உள்ளது. இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நடித்து தென்னிந்திய நடிகையாகி விட்டேன்.
தமிழில் வாய்ப்புகள் வரவில்லையா?
இதயத் திருடனுக்குப் பிறகு சில படங்கள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் சப்ஜெக்ட் என் மனசுக்குப் பிடித்தால் தான் நடிக்கச் சம்மதிப்பேன். அதே நேரத்தில் தெலுங்கில் நல்ல படங்கள் வந்தன.
நடிக்க வந்த பிறகு கண்டிஷன் போடுவது சரியா?
ஒரு படம் நன்றாக இல்லை என்றால் இதையும் ஒரு படம் என்று தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறாரே என்று என்னையே விமர்சனம் செய்வார்கள். எனக்கு ஏதோ ஒரு படம் என்கிற வாய்ப்பில் ஆர்வமில்லை.
மச்சக் காரன் எப்படி இருக்கும்?
இந்தப் படம் நல்ல சப்ஜெக்ட். தமிழில் எனக்கு நல்ல இடத்தைத் தேடித் தரும். இளைஞர்களைக் கவரும் விதத்தில் இளமைத் துள்ளலுடன் கலர் ஃபுல்லாக சொல்லப்படுகிற கதை. நிச்சயம் நன்றாக இருக்கும். எனக்கும் நல்ல பெயரைத் தேடிக் கொடுக்கும்.
கிளாமராக நடிப்பதில் உங்கள் கொள்கை என்ன?
சினிமா ஒரு கமர்ஷியல் உலகம். இங்கே சில எக்ஸ்போஷர் தேவை. இளமையான கதையில் யதார்த்தமான கிளாமர் என்றால் தப்பில்லை. கிளாமரை வலிய திணிப்பது போல் இருந்தால் பார்க்க நன்றாக இருக்காது அல்லவா?
உங்கள் தொழிலில் குடும்பத்தினர் குறுக்கிடுவது உண்டா?
எங்கள் குடும்பம் பல்வேறு தொழிலில் புகழ்பெற்ற குடும்பம். தாத்தா ராம்ஜெத்மலானி. நாமறிந்த வழக்கறிஞர். எங்கள் குடும்பத்தினர் அரசியலிலும் இருக்கிறார்கள். அவரவர்க்குப் பிடித்த துறைகளில் ஈடுபட எங்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். யாருடைய உரிமையிலும் யாரும் குறுக்கிடுவதோ தலையிடுவதோ கிடையாது.
|