2012 – பிரமாண்ட வசூல்

புதன், 25 நவம்பர் 2009( 16:52 IST )
ரோலண்ட் எம்மெரிச்சின் 2012 உலகம் முழுவதும் வசூலை வாரி இறைத்து வருகிறது. தமிழகத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் அளவுக்கு இந்தப் படத்துக்கு பிரிண்டுகள் போடப்பட்டிருப்பதும், ஓபனிங் இருப்பதும் நம்ப முடியாத அதிசயம்.
2012 வெளியான முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 4.2 கோடிகளை வசூலித்து முன்னணி நடிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ஹவுஸ்ஃபுல்லாக தமிழகம் முழுவதும் இப்படம் வெற்றி நடை போடுகிறது.
சென்னையை பொறுத்தவரை தமிழ்ப் படங்களின் வசூலை இப்படம் ஓரங்கட்டியிருக்கிறது. இந்தப் படத்துக்கு வரும் ரசிகர் கூட்டம் தமிழ்ப்பட இயக்குனர்களை யோசிக்க வைத்திருக்கிறது. இது தமிழ்ப் படங்களின் கதை, மற்றும் காட்சிப்படுத்துதலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
தமிழகத்தில் 2012 படத்தை ராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.