பழசிராஜா சாதனை

செவ்வாய், 24 நவம்பர் 2009( 19:12 IST )
பழசிராஜா படம் மலையாளப் படவுலகில் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதுவரை வெளியான மலையாளப் படங்களில் இந்தப் படமே அதிக வசூல் செய்திருப்பது அதில் ஒன்று.
பழசிராஜாவின் விசிடி, டிவிடி, புளூ ரே டிஸ்கின் உரிமையை மோசர் பேர் வாங்கியுள்ளது. இதற்காக இதுவரை எந்த மலையாளப் படத்துக்கும் கொடுக்காத பெருந்தொகை கைமாறியிருக்கிறது.
மேலும், பழசிராஜாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. 2.60 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை ஏசியாநெட் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
இதற்கு முன் மலையாள முன்னணி நடிகர்கள் அனைவரும் இணைந்து நடித்த டுவென்டி20 படத்தின் ஒளிபரப்பு உரிமையே அதிக விலைக்கு விற்கப்பட்டிருந்தது. 2.25 கோடி என்ற அந்த சாதனையை பழசிராஜா முறியடித்திருக்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களின் பட்ஜெட் 3.5 கோடியை தாண்டக் கூடாது என்று கட்டளை பிறப்பித்திருக்கும் தயாரிப்பாளர்கள் பழசிராஜாவின் வெற்றியைப் பார்த்து கலங்கிப் போயிருக்கிறார்கள். காரணம் பழசிராஜாவின் பட்ஜெட் ஏறக்குறைய 20 கோடிகள்.