மலையாளத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது பழசிராஜா. ஏறக்குறைய இருபது கோடிகள் என்கிறார்கள். படம் நல்ல வசூலை தந்தாலும் அடி வயிற்றில் நெருப்புடன் அலைகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஏன்?
மோகன்லால், மம்முட்டி போன்ற மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு சராசரியாக ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. சூப்பர் ஸ்டார்களின் சம்பளத்தையும் சேர்த்துதான்.
இதையே தயாரிப்பாளர்களால் தாங்க முடியவில்லை. மூன்றரை கோடிக்கு மேல் பட்ஜெட் போகக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இது நடந்து பல வாரங்கள் ஆகிறது.
இந்நிலையில் இருபது கோடி பழசிராஜா ரிலீஸாக பதறிவிட்டார்கள். மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி என ஆளுக்கு ஒரு இருபது கோடி பட்ஜெட்டை தயார் செய்தால் என்னாவது?
அலறியடித்து நடிகர் சங்கம் அம்மாவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டவர்கள் மூன்றரை கோடி ரூபாய் சமாச்சாரத்தை கறாராக அமல்படுத்தியிருக்கிறார்கள். மேலும், நடிகர்களின் சம்பளத்தை குறைக்கவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்கள் அதற்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு தீர்மானம், படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு 45 நாட்களுக்குமுன் நடிகர்களிடம் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் கொடுத்துவிட வேண்டுமாம்.
நல்லவேளை, தமிழில் இப்படியோரு விதிமுறை இல்லை. நாமெல்லாம் ஸ்பாட்டுக்குப் போன பிறகுதானே கதையைப் பற்றியே யோசிப்போம்.