முதிய தலைமுறை இயக்குனர்கள் மீண்டும் படம் இயக்க வருகிறார்கள். எத்தனையோ வருடங்கள் கழிந்த பிறகும் இவர்கள்தான் இளைய தலைமுறைக்கு ரோல் மாடல்.
பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம், வண்ணக்கோலங்கள், மூன்றாம் பிறை படங்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. அதேபோல் தமிழ் சினிமாவின் சிறந்த ஐந்து படங்களைத் தேர்வு செய்தால் அதில் மகேந்திரனின் உதிரிப்பூக்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. இந்த இருபெரும் மேதைகள் மீண்டும் படம் இயக்குகிறார்கள்.
அது ஒரு கனாக்காலம் படத்துக்குப் பிறகு பல வருட இடைவெளிவிட்ட பாலுமகேந்திரா, மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய படத்தை இயக்குகிறார். சாசனம் படத்தை இயக்கிய மகேந்திரன் ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்க முன்வந்துள்ளார்.
படம் இயக்குவது என்பதை மட்டும் இருவரும் உறுதி செய்திருக்கிறார்கள். நடிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஓல்டு இஸ் கோல்டு என்று சொல்லும் விதமாக இவர்கள் படங்கள் இருக்கும் என்று நம்புவோம்.