சத்தம் இல்லாமல் ஒரு பஞ்சாயத்து நடந்து முடிந்திருக்கிறது. பாரதிராஜா, பாலசந்தர், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்கள் சம்பந்தப்பட்ட படத்தின் பஞ்சாயத்து என்றால் நம்ப முடிகிறதா?
மேலே உள்ள மூவரும் இணைந்து பணிபுரியும் படம் ரெட்டைச்சுழி. தாமிரா இயக்கும் இந்தப் படத்தில் இமயமும், சிகரமும் நடிகர்கள். ஷங்கர் தயாரிப்பாளர்.
ரெட்டைச்சுழி தொடங்கும்போதே பிரச்சனை. படத்தின் கதை விவாதம் முதல் தன்னுடன் இருந்த பல அசிஸ்டெண்டுகளை படப்பிடிப்பு தொடங்கியதும் கழற்றிவிட்டார் தாமிரா. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது சிலர் கழன்று கொண்டனர். 'இயக்குனருக்கு ஷாட் வைக்க தெரியவில்லை, பாரதிராஜா கோபம்' என்றெல்லாம் பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்நிலையில் படத்தின் கலை இயக்குனர் பெயரை டைட்டிலில் போட மாட்டேன் என்று தாமிரா சொன்னதாக பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டது. உயிரைக் கொடுத்து வேலை செய்த கலை இயக்குனர் விடுவாரா? பிரச்சனை கலை இயக்குனர்கள் சங்கத்துக்கு சென்றது.
அவர் பெயரை கண்டிப்பாக போட மாட்டேன் என்று முதலில் முரண்டு பிடித்தவர், பிரச்சனை பெப்சிக்குப் போகும் என்றதும், தனது பிடிவாதத்தை தளர்த்தியிருக்கிறார். டைட்டிலில் கலை இயக்குனரின் பெயர் கண்டிப்பாக வரும் என உறுதி அளித்த பிறகே பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது.