அனிமேஷன் படங்கள் தமிழில் தயாராவது அபூர்வம். அதுவும் குழந்தைகளை மனதில் வைத்து யாரும் அனிமேஷன் படம் தயாரிப்பதில்லை. ஆக்கர் ஸ்டுடியோவின் சுல்தான் தி வாரியரும் ரஜினி ரசிகர்களை மனதில் வைத்தே தயாராகி வருகிறது.
அனிமேஷன் படங்களுக்கு இருக்கும் சர்வதேச மார்க்கெட் குறித்து யாருக்கும் சரிவர தெரியாததே இந்த தேக்க நிலைக்கு காரணம். அதையும் மீறி தனி மனிதர்களின் முயற்சியில் அவ்வப்போது அனிமேஷன் படங்கள் வரத்தான் செய்கின்றன.
ராம் வி.மணி தனது சி.சி.எக்ஸ் ஸ்டுடியோ அண்ட் சி.சி.எக்ஸ் அகாடமி சார்பில் அனிமேஷன் படம் ஒன்றை உருவாக்குகிறார். ஆச்சரியமாக குழந்தைகளை கவரும் வகையில் கதையை தேர்வு செய்திருக்கிறார் ராம் வி.மணி.
காட்டுப்புலி ஒன்று மனிதர்களையும் மிருகங்களையும் வேட்டையாடுகிறது. சர்க்கஸிலிருந்து தப்பிக்கும் இன்னொரு புலி மனிதர்களை நண்பர்களாக நினைத்து பழகுகிறது. சிறுவன் ஒருவனுடன் அதற்கு நட்பும் ஏற்படுகிறது. இதனால் கோபமாகும் காட்டுப்புலி சிறுவனை கொல்ல முயல்கிறது. அந்த புலியிடமிருந்து சிறுவனை சர்க்கஸ் புலி எப்படி காப்பாற்றுகிறது என்பது கதை.
குழந்தைகளை மனதில் வைத்து தயாராகி இருக்கும் இந்தப் படம் விரைவில் வெளிவருகிறது. படத்துக்கு நல்ல பெயராக தேடி வருகிறார்கள்.