வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்துக்கு இப்படியும் பெயர் வைத்திருக்கலாம். படத்தின் மொத்த கதை இந்த ஒத்த வரியில் இருக்கிறது.
ஜெமினி பட நிறுவனம் சார்பாக ஆனந்த விகடன் எஸ்.எஸ்.வாசன் பிரமாண்டமாக தயாரித்த படம் வஞ்சிக்கோட்டை வாலிபன். ஜெமினி, வைஜெயந்திமாலா, பத்மினி நடித்த இப்படம் வெளிவந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதே பெயரில் தயாரானாலும் இந்த வஞ்சிக்கோட்டை வாலிபனின் கதை வேறு. பெண்களின் மனதை பூ என்பார்கள். ஆனால், இந்தப் படத்தின் நாயகியின் மனசு இரும்பு. ஆண்கள் யாரும் அதில் அத்துமீறக் கூடாது என்பதற்காக மனசை ஒரு கோட்டைபோல் பாதுகாக்கிறவர். அந்த கோட்டையை ஹீரோ எப்படி உடைத்து உள்ளே நுழைகிறான் என்பது கதை.
மலையாளத்தில் சாக்லேட், கலர்ஸ் உள்பட பல படங்களில் நடித்திருக்கும் ரோமா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஷக்தி ஹீரோ. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எஸ்.கே.ஜீவா. இவர் புதுமைப்பித்தன், லவ்லி படங்களை இயக்கியவர். விஜய்யின் அழகிய தமிழ்மகன் படத்தின் கதையை எழுதியவரும் இவரே.
கோபிசெட்டிப்பாளைத்தில் படப்பிடிப்பை தொடங்கி கோவை, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடத்தயிருக்கிறார்கள். கந்தர்வா செலுலாயிட்ஸ் சார்பில் கிருத்திகா, வி.என்.பகவத்சிங் படத்தை தயாரிக்கின்றனர்.