முன்பெல்லாம் ஒரு படத்தில் ஐந்து ஹீரோயின்கள் நடித்தால் அது ஆச்சரிய செய்தி. மாயாண்டி குடும்பத்தாருக்குப் பிறகு அந்த ட்ரெண்ட் மாறிவிட்டது. படத்தில் எத்தனை இயக்குனர்கள் நடிக்கிறார்கள் என்பதுதான் ஹாட் கேள்வி.
மாயாண்டி குடும்பத்தாரில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்த இராசுமதுரவன் தனது அடுத்தப் படமான கோரிப்பாளையத்தில் ஐந்து இயக்குனர்களை நடிக்க வைக்கிறார்.
கோரிப்பாளையம் சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தயாராகிறது. தூங்கா நகரத்து இளைஞர்களின் தூக்கத்தை கலைத்த கதை என்று படத்தின் ஒருவரி கதையை கூறலாம்.
ஒன்று முதல் ஐந்து வயது வரை ஒரு குழந்தையோட உயிரை கவனமா பார்த்துக்கணும். 18 முதல் 25 வயது வரை மனசை கவனமா பார்த்துக்கணும். அதில் தவறினால் என்னாகும் என்பதை கோரிப்பாளையத்தில் சொல்லப் போறேன் என்றார் இராசுமதுரவன்.
இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் நடிக்கிறார்கள் மாயாண்டி குடும்பத்தாரில் அனைவரையும் கவர்ந்த சிங்கம்புலி இந்தப் படத்தில் மயில்சாமியுடன் காமெடி செய்கிறார்.
மாயாண்டி குடும்பத்தாரின் வெற்றிக்குப் பிறகு புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார் இராசுமதுரவன். அதாவது இனி பெரிய ஹீரோக்களை வைத்துதான் படம் இயக்குவாராம். மறு பரிசீலனை பண்ண வேண்டிய முடிவு.