பத்து வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்த திரையரங்குகளின் எண்ணிக்கை 3000. இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு சைசுக்கு வந்திருக்கிறது. அதிகம்போனால் 1400 திரையரங்குகள்தான் இன்று தேறும். அதிலும் கால்வாசி மூடிக் கிடக்கிறது என்கிறார் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம்.
கவலைப்பட வேண்டிய விஷயம்தான். திரையரங்கு தொழிலை துரிதப்படுத்த அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், அந்த உதவி எப்படிப்பட்டது என்பதில் இரு தரப்பாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கிறார்கள் திரைத்துறையினர்.
ஏற்கனவே பெண்கள் திரையரங்குக்கு வருவதில்லை, தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்றொரு வருத்தம் திரைத்துறையில் நிலவுகிறது.
இந்நிலையில் திரையரங்கில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும், அதன் பாரை நடத்தும் உரிமை எங்களுக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். துணை முதல்டவரிடமும் இது குறித்து மனு கொடுத்திருப்பதாக கேள்வி.
இந்த போதை கோரிக்கைக்கு திரைத்துறையிலேயே கடும் எதிர்ப்பு. சமத்துவ கட்சி தலைவரும் நடிகர் சங்கத் தலைவருமான சரத்குமார் திரையரங்கில் டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்கள் சிலருமே இந்த கோரிக்கைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அரசு தள்ளாடாமல் உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.