உளியின் ஓசை படத்துக்குப் பிறகு இளவேனில் இயக்கும் படம் நீ இன்றி நான் இல்லை. தமிழக முதல்வர் கருணாநிதியின் சுருளிமலை கதையை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது. படத்தின் வசனத்தையும் முதல்வரே எழுதுகிறார்.
ஞாயிறு காலை படத்தின் தொடக்கவிழா சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. முதல்வர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன், சூர்யா, விவேக், நடிகை மனோரமா, தயாரிப்பாளர்கள் ஏவிஎம் சரவணன், ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், காஜா மொய்தீன், அன்பாலயா பிரபாகரன், எடிட்டர் மோகன் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன் பேசும் போது, கலைஞரின் வசனம் பேசிதான் இந்த பீல்டுக்கே வந்தேன். நடிக்கச் சொல்லி கேட்பவர்களிடம் அவரது வசனத்தைதான் பேசி காட்டியிருக்கிறோம். இனியும் அவரது பேனா எங்களுக்காக எழுத வேண்டும் என்றார்.
விவேக்கின் பேச்சில் வழக்கம்போல நகைச்சுவை. படத்தின் கதை என்ன, என்னுடைய கேரக்டர் என்ன என்று கேட்ட போது முதல்வருக்குதான் தெரியும் என்றார்கள். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்று கேட்டதற்கு முதல்வர்தான் என்று கூறிவிட்டு பிறகு சமாளித்தார்கள். உண்மையில் அவரும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர்தான். எத்தனையோ போராட்டங்களை சமாளித்திருக்கிறார் என்ற போது அமைச்சர்கள் வரிசையில் ரகளையான கைத்தட்டல்.
சூர்யா பேசுகையில் முதல்வர் 16 மணி நேரம் உழைப்பதை சுட்டிக் காட்டினார். வழக்கமான உணர்ச்சிப் பெருக்குடன் மைக்கில் பேச ஆரம்பித்தார் மனோரமா. முதல்வர் நாடகங்களில் தனது கதாநாயகனாக நடித்ததை அவர் நினைவு கூர்ந்தது மறக்க முடியாத மலரும் நினைவு.
விழாவின் ஆச்சரியமும், நீளமுமான பேச்சும் என்றால் அது முதல்வருடையது. தனக்கு முன்னால் பேசிய அனைவரின் பேச்சுக்கும் முதல்வர் பதிலளித்தார். கமல் அவ்வை சண்முகி வேடத்தில் தன்னை காண வந்ததை அவர் விவரித்தவிதம் சிறந்த திரைக்கதை.
விழா இறுதியில் படத்தின் தயாரிப்பாளர் ஆறுமுகனேரி எஸ்.பி.முருகேசன், ஜெய முருகன் நன்றி கூறினர்.