ஜெய்க்கு பதில் கிருஷ்ணா

திங்கள், 29 ஜூன் 2009( 12:57 IST )
வாமனன், அதே நேரம் அதே இடம், அர்ஜுனன் காதலி, கோவா என பிஸியாக இருக்கிறார் நடிகர் ஜெய். நான் நடிக்கும் படங்களில் வாமனனை தவிர்த்து மற்ற இரு படங்கள் - அர்ஜுனன் காதலி, அதே நேரம் அதே இடம் - ஒரு வாரம்கூட ஓடாது என்று கூறியதால் அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது. முதலில் ஒப்புக் கொண்ட மூன்று படங்களையும் முடித்த பிறகே புதிய படத்தில் நடிக்க வேண்டும் என சங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாமனன் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அதே நேரம் அதே இடம், அர்ஜுனன் காதலி இரண்டும் ஜெய்யின் ஸ்டேட்மெண்டால் அடுத்தகட்டத்துக்கு நகர முடியாமல் நொண்டியடிக்கின்றன. ஹீரோவே ஓடாது என்று சொன்ன பிறகு யார் படத்துக்கு பைனான்ஸ் செய்வார்கள்?
ஜெய்யை வைத்து படம் எடுப்பதாக இருந்த பலரும் வேறு ஹீரோ தேடுகிறார்கள். புஷ்கர் காயத்ரி ஜெய் நடிப்பில் ராக்கோழி படத்தை எடுப்பதாக இருந்தனர். தற்போது ஜெய்க்கு பதில் அலிபாபா கிருஷ்ணாவை ஒப்பந்தம் செய்ய யோசித்து வருகின்றனர். முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கற்றது களவு படத்தில் நடித்துவரும் கிருஷ்ணா அந்தப் படத்துக்குப் பிறகு புஷ்கர் காயத்ரி இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.