தாய்மார்கள் விரும்பும் குடும்பப் படம், ஆறு பாட்டு, நாலு சண்டைகள் நிறைந்த அதிரடி திரைப்படம்... என்றெல்லாம் விளம்பரங்கள் செய்வது அவுட் ஆஃப் பேஷன். கிராமத்துப் பின்னணியில் யதார்த்த படைப்பு என்றால்தான் தமிழ் சினிமாவில் மதிக்கவே செய்கிறார்கள்.
WD
கலைந்த சிகையும், நாலு நாள் தாடியுமாக தேனி பக்கம் யதார்த்த ஜுரம் ஏறி அலையும் இயக்குனர்களைப் பார்த்தால் டர்ராகிறது. படம் பார்க்கிறவர்களை விடுங்கள். நடிக்கிறார்களே... எம கண்டம். ஐடி இளைஞர்கள் நாலு பேரை வாய்ப்பு தருகிறேன் என்று நாலு மாதம் கட்டாந்தரையில் உருள வைத்திருக்கிறார் ஒரு யதார்த்த இயக்குனர். பட்டினியும், கட்டாந்தரை ட்ரீட்மெண்டுமாக எஃப் சேனல் மாடல் மாதிரி ஆகியிருக்கிறார்கள் நால்வரும்.
துருத்திய நாக்கும், தூக்கிகட்டிய லுங்கியுமாக மதுரை பாஷையில் இவர்கள்விடும் சவுண்ட், பொல்யூசன் கண்ட்ரோல் வரைக்கும் போயிருப்பதாக கேள்வி. கோடம்பாக்கத்தை பாடாய்படுத்தும் இந்த யதார்த்த மேனியாவுக்கு துவக்கப்புள்ளி, பருத்திவீரன். அடுத்து சுப்பிரமணியபுரம். தொடர்ச்சியாக வெண்ணிலா கபடிக்குழு, பசங்க, நாடோடிகள்.
தொடக்கவிழாவில், ரொம்ப வித்தியாசமாக கதை பண்ணியிருக்கோம் என்று ஜல்லியடிப்பதை நிறுத்தி, யதார்த்தமா எடுக்கப் போறோம் என்று சொல்லும் அளவுக்கு இந்தப் படங்களின் வெற்றி தமிழ் சினிமாவை பாதித்திருக்கிறது.
இதெல்லாம் பக்க விளைவுகள். நல்ல விளைவுகளும் உண்டு. முக்கியமாக கமர்ஷியல் சினிமா உலகம் வரித்துக் கொண்ட சில ‘சினிமா உண்மை’களை இந்தப் படங்கள் உடைத்தெறிந்திருக்கின்றன.
WD
படம் எடுக்க பத்து கோடி வேண்டும், மாஸ் நடிகரின் கால்ஷீட் முக்கியம் என்பதையெல்லாம் யதார்த்த சினிமாக்களின் வெற்றி துடைத்தெறிந்திருக்கிறது. இரண்டு கோடியில் கதை சொல்லி இருபது கோடி வரை சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையை தந்திருக்கின்றன சுப்பிரமணியபுரமும், வெண்ணிலா கபடிக்குழுவும்.
ஹீரோ என்றால் நல்லவன், வில்லன் என்றால் கெட்டவன் என்று மனிதர்களை பிளாக் அண்ட் ஒயிட்டாக பிரிக்கும் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் வியாதியும் இந்தப் படங்களின் வரவால் தீர்ந்திருக்கிறது.
பருத்தி வீரன் ஹீரோவைப் பாருங்கள். தண்ணியடிப்பவன், பெண் சகவாசம் உள்ளவன், ரவுடி இத்யாதி... சுப்பிரமணியபுரம் நண்பர்களும் அப்படியே. வில்லன் என்றால் மொட்டை தலையுடன் பெண்கள் புடைசூழ விஸ்கி குடிப்பவன் என்ற பிம்பத்தை சுப்பிரமணியபுரம் கலைத்துப் போட்டது. சமூகத்தில் மதிக்கப்படுகிற சராசரி குடும்பம்தான் அனைத்து வன்முறைக்கும் காரணமாக இருக்கிறது. அவர்கள் ரவுடிகளை உருவாக்குகிறார்கள், போஷிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள்.