54வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களுக்கு இடம்தராத விருதுகள் இந்த பூமியில் இல்லை.
''எனக்கு சிறந்த நடிகருக்கான ஜுரி அவார்டு தந்திருக்கிறார்கள். இதே ஜுரிகள்தானே இன்னொருவரையும் சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தார்கள்'' என்று விருதுகள் வழங்கப்படும் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார், 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஜுரி விருது பெற்ற நடிகர் திலகன்.
இன்னும் ஏராளமான விமர்ச்சனங்கள் இதேபோன்று முன்வைக்கப்படலாம். அதற்கு முன் தேசிய விருது பெற்றவர்களில் நம்பிக்கையான சிலர் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ப்ரியாமணி. பருத்திவீரனுக்கு முன்பும் சரி பின்பும் சரி ரசிகர்களின் மலிவான உணர்ச்சியை தூண்டும் தமிழ் சினிமா கதாநாயகியாகவே திரையை நிறைத்திருக்கிறார் ப்ரியாமணி. (விதிவிலக்கு அது ஒரு கனாக்காலம்).
அசட்டுத்தனமாக சிரித்து கதாநாயகனின் அணைப்புக்காக ஏங்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த ப்ரியாமணியை பருத்திவீரனில் முற்றிலுமாக மாற்றியிருந்தார் இயக்குனர் அமீர். தூங்கி எழும்போதும் துலக்கி வைத்த குத்து விளக்காக நடிகை தெரிய வேண்டும் என்பது பொது விதி. இதனை பருத்திவீரனில் உடைத்தார் அமீர்.
எண்ணெய் வழியும் முகம், சாதாரண சீட்டிப்பாவாடை என கிராமத்து முத்தழகை அப்படியே கண்முன் கொண்டு வந்தார். அதேபோன்று குரல். ஜோதிகா, சிம்ரன், சினேகா என்று திரையில் யார் தோன்றினாலும் குரல் ஒன்று போலிருக்கும். மதுரமான குரல் உடைய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அனைத்து நடிகைகளுக்கும் குரல் கொடுத்தால் எப்படி குரலின் தனித்துவத்தை அடையாளம் காண்பது?
|