கமலுக்கு ஜோடி அசின். படத்தில் இவருக்கு இரண்டு வேடங்கள். இன்னொரு ஜோடி ஜெயப்ரதா. குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார். மல்லிகா ஷெராவத் அழகான சி.ஐ.ஏ. ஏஜென்ட்.
படத்தைப் போல தசாவதாரத்தின் கதையும் பிரமாண்டமானது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டு வரை கதை பயணிக்கிறது. நடுவில் கறுப்பு நிற தொழிற்சங்க வாதி, ஏழடி உயர மனிதன், தற்காப்புக் கலை நிபுணர், வெள்ளைக்கார விஞ்ஞானி, தலை வெளுத்த மூதாட்டி என வெவ்வேறு வேடங்களில் வந்து போகிறார் கமல். ''பத்து வேடங்களில் ஒன்று மட்டுமே சாதாரண கமல். மற்ற ஒன்பது வேடங்களிலும் கமலை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது'' என்கிறார் படத்தை இயக்கும் கே.எஸ். ரவிக்குமார்.
படத்தின் கதை பல நூற்றாண்டுகள் பயணிப்பதற்கு இணையாக, கதை நிகழும் இடமும் பல நாடுகளினூடாக கடந்து செல்கிறது. அமெரிக்காவுக்கு கதை செல்லும் போது, கமல் ஒரு விஞ்ஞானி. பிரமாண்டமான ஆராய்ச்சி கூடத்தில் நவீன கணினிகள் மிகப் பெரிய எந்திரங்களை இயக்குகின்றன. கலை பிரமாண்ட செயற்கை ஆராய்ச்சி கூடம் கடைசியில் முற்றிலுமாக அழிந்து போகிறது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வெளியே, கமல் தற்காப்புக் கலைஞராக நடிக்கும் வேடம் எடுக்கப்பட்டது. இங்கு அகிடோ (Akido) என்ற பாரம்பரிய சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் Sonny lake என்ற தற்காப்புக் கலை நிபுணர்.
அமெரிக்காவில் எடுக்க முடியாமல் போன பாடல் காட்சி மலேசியாவின் இரவு விடுதியில் எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆட, கமல் அதை ரசிப்பது போல் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்தப் பாடலை பாடியவர் கமலின் மகள் ஸ்ருதி கமல்ஹாசன்.
இரண்டு வருடங்களுக்கு மேல் நீண்ட படப்பிடிப்பில் பலர் உள்ளே வந்தார்கள். பலர் வெளியேறினார்கள். கலை இயக்குனர்களாக பிரபாகரன், சமீர்சந்தா, தோட்டா தரணி ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். உள்ளூர் சண்டையை வடிவமைத்தவர்கள் தியாகராஜன், கனல் கண்ணன். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை அமைத்தவர்கள் Joop Katana மற்றும் Matos.
எட்டு வருடங்களுக்கு முன் கமலின் மனதில் கருக் கொண்ட கதை, தசாவதாரம். பட்ஜெட்டின் பயத்தால் மனசுக்குள்ளேயே இருந்தது. ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தைரியத்தால் இன்று திரைவடிவம் கண்டிருக்கிறது.
தசாவதாரம் தொடங்கும் போது இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா வளர்ந்து வரும் கலைஞர். படம் முடியும்போது, பிஸியான நடிகர். அதனால், படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
ஹிமேஷ் போன்று பாதியில் நழுவாமல் கடைசிவரை தவம்போல் பணிபுரிந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். ஜிம்மி, ஜிப், ஸ்டெடி கேம், பான்தர் கிரேன் என நவீன கருவிகள் அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் ரவிவர்மன். தசாவதாரத்தை யாருக்கும் முன் பார்த்தவர் என்ற வகையில் இவரது விமர்சனம் முக்கியமானது. '' எனக்கு இந்தப் படம் தனியா ஒரு இன்ஸ்டிட்யூட்ல படிக்கின்ற அனுபவத்தை தருது. ஒவ்வொரு காட்சியை எடுக்கும் போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போது சுவாரஸியமாகவும், பிரமாதமாகவும் இதுக்கு.''
கமலின் பிற படங்களுடன் ஒப்பிடும்போது, தசாவதாரம் குறித்து கமல் பேசியவை சொற்பம். கே.எஸ். ரவிக்குமார் பேசியது அதைவிட சொற்பம். ''எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்'' என ஒரே வரியில் முடித்துக் கொண்டார். ஒரு வேளை படம்தான் அனைவரையும் பேச வைக்கப் போகிறதே என நினைத்திருக்கலாம்.
வருகிற ஏப்ரல் 2 தசாவதாரத்தின் ஆடியோ வெளியீடு. ஜாக்கிசான், அமிதாப்பச்சன் என பெரிய பெரிய பெயர்கள் விழா அழைப்பிதழில் தென்படுகின்றன. படம் குறித்த எதிர்பார்ப்பு காலை வெயிலாக எங்கும் பரவியிருக்கிறது. எதிர்பார்ப்பை நிறைவு செய்து ரசிக மனங்களை தசாவதானியின் தசாவதாரம் சுனாமியாக சுருட்டிக் கொள்ளும் என்று நம்பலாம்! |