''கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது... கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது... சைவம் என்று பார்த்தால் தெய்வம் கிடையாது... தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது...''
உடம்பில் திருமண் அணிந்த ரங்கராஜன் நம்பி உச்சஸ்தாயியில் பாடி வருகிறார். அவரது முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்கிறார்கள். வழியெங்கும் சோழ மண்டல குடிமக்கள். இருபுறமும் குலோத்துங்க சோழனின் குதிரைப் படைகள். தொலைவில் குலோத்துங்கனின் பட்டத்து யானை என பெரியதோர் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படுகிறார் ரங்கராஜன் நம்பி.
தசாவதாரம் படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியில் 12ஆம் நூற்றாண்டு ரங்கராஜ நம்பியாக கமல் நடித்திருக்கிறார். பொன் வேய்ந்த சிதம்பரம் கோயில், விசாலமான கோயில் வளாகம் என அன்றயை சோழ மண்டலம் அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
காட்சியின் பிரமாண்டம், கலை இயக்குனரின் திறமை இவற்றைத் தாண்டி உள்ளுறையாக பல உண்மைகளை இந்தக் காட்சியில் விளக்குகிறார் கமல். கமலின் படங்கள் - அது மகாநதியாக இருந்தாலும், ஹேராமாக இருந்தாலும் ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா பரப்பில் நினைவுக் கூறப்படுவது, அது உள்ளுறையாகச் சொல்லும் செய்திகளுக்காகவே!
இன்று சைவமும் வைணமும் இந்து எனும் அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாகக் காணப்பட்டாலும், கதை நிகழும் கால கட்டத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் கடவுளை முன்னிறுத்தி பெரும் பகை இருந்தது. சுடுகாட்டு சிவனுக்கு கோயில் எதற்கு என வைணவர்களும், கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜை எதற்கு என சைவர்களும் இரு பிரிவாக மோதிக் கொண்டனர். குலோத்துங்க சோழன் சைவம். ரங்கராஜ நம்பி வைணவம். இதற்கு கிடைத்த வெகுமதிதான் முதுகை துளைக்கும் இரும்பு கொக்கியும், கடலில் ஜல சமாதியும்!
கமல் திரையுலகில் நுழைந்தது குழந்தை நட்சத்திரமாக வளர்ந்த பிறகு அவரது ஆர்வம் நடனத்தின் பக்கம் திரும்பியது. உதவி நடன இயக்குனராக பல படங்களுக்குப் பணிபுரிந்திருக்கிறார். பாலசந்தரின் கண்ணில் பட்டதும் அபூர்வ ராகங்களில் நடித்ததும் அவரது வாழ்வின் திருப்புமுனைகள்.
தசாவதாரம் கமலின் இன்னொரு திருப்புமுனை. உலகில் வேறெந்த நடிகரும் ஒரே படத்தில் பத்து வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. முகத்தை மட்டுமின்றி உடலின் உயரத்தை, தோலின் நிறத்தை, உடலின் பருமனை என அனைத்தையும் இந்த பத்து வேடங்களுக்காக மாற்றியிருக்கிறார்.
கமல் ஒரு நடிகர், நடன இயக்குனர், பாடல்கள் எழுதக் கூடியவர், படங்களை இயக்கியவர், அதிக எண்ணிக்கையில் படம் தயாரித்தவர், கதாசிரியருக்கான விருது வாங்கியவர், சிறந்த திரைக்கதை எழுதக் கூடியவர், நல்ல வசன கர்த்தா, சிகையலங்கார நிபுணர் என அவரது நவ பரிமாணங்கள் அனைவருக்கும் தெரியும். தெரியாதது, அவர் ஒரு சிறந்த ஒப்பனைக் கலைஞர் என்பது.
ராம்போ படத்தில் பணிபுரிந்த ஹாலிவுட் ஒப்பனை கலைஞரிடம் உதவியாளராக இருந்திருக்கிறார் கமல். குணா திரைப்படத்தில் கமல் கத்தியால் கையை கீறிக் கொண்டதும் ரத்தம் நிற்காமல் சொட்டும். தத்ரூபமாக எடுக்கப்பட்ட இந்தக் காட்சி கமல் ஹாலிவுட்டிலிருந்து கற்றுக் கொண்டு வந்தது.
தசாவதாரத்தில் கமலை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி மாற்றியவர்கள் இருவர். ஒருவர் மோஷர், ஒப்பனைக் கலைஞர். இன்னொருவர் பெம்ரிகர், சிகையலங்கார நிபுணர். இருவருமே ஹாலிவுட்டிலிருந்து வந்தவர்கள்.
|