வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 16 மார்ச் 2016 (20:24 IST)

வங்கதேசத்தை பந்தாடியது பாகிஸ்தான்; 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி 20 உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
6ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் ’2’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சர்ஜீல் கான் 18 ரன்களில் அவுட் ஆனார். பின்னர், ஜோடி சேர்ந்த அஹமது ஷெசாத், முஹமது ஹஃபீஸ் இணை வங்கதேச அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் ஓட விட்டனர்.
 
இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 95 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி 121 ரன்கள் எடுத்திருந்தபோது அஹமது ஷெசாத் 39 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்தார்.
 
அஃப்ரிடி அதிரடி:
 
இதனை தொடர்ந்து களமிறங்கிய ஷாகித் அஃப்ரிடி வாணவேடிக்கை காட்டினார். 19 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட 49 ரன்கள் குவித்தார். இதற்கிடையில் ஹஃபீஸ் 64 ரன்கள் குவித்து வெளியேறினார். வங்கதேச தரப்பில் டஷ்கின் அஹமது, அராஃபத் சன்னி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர், கடின இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்கார் ‘டக்’ அவுட் ஆகி தோல்வியை தொடங்கி வைத்தார். தமிம் இக்பால், சபீர் ரஹ்மான் இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. பின்னர், சபீர் ரஹ்மான் 25 ரன்னிலும், தமிம் இக்பால் 24 ரன்னிலும் வெளியேறினர்.
 
பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மஹ்மதுல்லா [4], முஷ்ஃபிகுர் ரஹிம் [18], மொஹமது மிதுன் [2] என அடுத்தடுத்து வெளியேறினர்.
 
இதனால், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
 
கடைசிவரை வெற்றிக்காக போராடிய ஷாகிப் அல்-ஹசன் 40 பந்துகளில் [5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகித் அஃப்ரிடி, மொஹமது அமிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.