1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 17 மார்ச் 2016 (15:59 IST)

கிறிஸ் கெய்ல் ருத்ர தாண்டவத்தில் சிதைந்தது இங்கிலாந்து

டி 20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
6ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-10 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் ’1’ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ரோய் 15 ரன்கள், அலெக்ஸ் ஹேல்ஸ் 28 ரன்கள் எடுத்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். இது பின்னால் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாட உதவியது.
 
ஜோ ரூட் 48, ஜோஸ் பட்லர் 30, பென் ஸ்டோக்ஸ் 15 என தங்களது பங்களிப்பை செலுத்தினர். இயன் மோர்கன் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் இங்கிலாந்து அணி குவித்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஆண்ட்ரூ ரஸ்ஸல் மற்றும் ட்வைன் பிராவோ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கெய்ல் ருத்ர தாண்டவம்:
 
பின்னர், 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், சார்லஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். பிறகு கெய்ல்-சாமுவேல்ஸ் இணை விக்கெட்டுகள் விழாமலும் அதே சமயம் கிடைக்கும் பந்துகளை அடித்தும் ஆடியது. பின்னர் சாமுவேல்ஸ் 37 ரன்களில் வெளியேறினார்.
 
இதற்கிடையில், கிறிஸ் கெய்ல் 27 பந்துகளில் [3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] அரைச்சதம் எடுத்தார். பின்னர், ராம்தின் 12 ரன்களிலும், டேரன் பிராவோ 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால், 12.2 ஓவர்களில் 113 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அப்போது ஓவருக்கு 9.50 ரன்ரேட் தேவை என்ற நிலையில் இருந்தது.
 
ஆனாலும், கிறிஸ் கெய்ல் தனது ருத்ர தாண்டவத்தை நிறுத்தவில்லை. அவர் அடுத்த 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டி 20 வரலாற்றில் தனது 2ஆவது சதத்தை [47 பந்துகள், 5 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்] பதிவு செய்தார். இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.