திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (14:28 IST)

வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும்' - உதயநிதி ஸ்டாலின் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

'வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும்'

வாரிசு அரசியல் என நினைத்தால் மக்கள் என்னை நிராகரிக்கட்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் என்கிறது தினமணி செய்தி.

சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் பதவி என்பது நியமனப் பதவி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாகும். நான் போட்டியிடுவதை வாரிசு அரசியல் என மக்கள் கருதினால், என்னை அவர்கள் நிராகரிக்கட்டும் என்று அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் - கமல் ஆதரவு யாருக்கு?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு ஒருவேளை தொங்கு சட்டமன்றம் அமைந்தால் மக்கள் நீதி மய்யம் எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் முதல்வராக ஆதரவளிக்காது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்னொரு தேர்தல் அழுத்தத்தை கொடுப்பதற்கு பதிலாக மக்களுக்கு உதவ வேண்டும்; ஆனால் இரண்டு தீங்குகளுக்கு இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்வோம் என்று கமல் ஹாசன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அல்லது ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டி இருந்தால் நான் அரசியலுக்கு வர வேண்டிய தேவையே இருந்திருக்காது என்றும் கமல் கூறியுள்ளார்.

2,000 ரூபாய் தாள்கள் இன்னும் அச்சடிக்கப்படுகிறதா?

இந்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் 2,000 ரூபாய் தாள்கள் அச்சிடுவது குறித்து மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலை இந்து தமிழ் திசை செய்தியாக வெளியிட்டுள்ளது.'

'2018-ம் ஆண்டு, மார்ச் 30-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.2 ஆயிரம் கரன்சி நோட்டுகள் 336.2 கோடி உள்ளன. 2021, பிப்ரவரி 26-ம் தேதி நிலவரப்படி, 249.9 கோடி எண்ணிக்கையிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன.

எண்ணிக்கையில் இது 2.01 சதவீதமாகவும், மதிப்பில் 17.78 சதவீதமாகவும் இருக்கிறது. குறிப்பிட்ட மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து அரசுதான் முடிவு எடுக்கும்.

கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி அச்சகம் 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்கவில்லை. கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் 354.39 கோடி எண்ணிக்கையான ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதாக 2019ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. 2017-18ஆம் ஆண்டில் 11.15 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்தான் அச்சடிக்கப்பட்டன.

2018-19ஆம் ஆண்டில் மேலும் இது குறைக்கப்பட்டு, 4.66 கோடி எண்ணிக்கையிலான 2,000 நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. 2019 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை," என தெரிவித்தார்.