1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 3 ஜூலை 2019 (19:24 IST)

ராகுல் காந்தி பதவி விலகல்: 'தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி விட்டேன்

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது.
 
ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.
 
2014இல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால் அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவித்திருந்தது.
 
இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல் அவர் தொடர்ந்து மூன்று முறை வென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.


 
இரண்டாவது தொகுதியாக அவர் களம் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் வென்றார்.
 
நானே பொறுப்பு'
இந்த நாட்டின் மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தொண்டாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய கௌரவம். என் மீது அளவுக்கும் அதிகமான அன்பையும் நன்றி உணர்வையும் காட்டிய இந்த நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 
கட்சியின் தலைவர் என்ற முறையில் தேர்தல் தோல்விக்கு தாமே பொறுப்பு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள நான்கு பக்க அறிக்கை ஒன்றில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
கட்சியின் அடுத்த தலைவரை தானே முன்மொழிய வேண்டும் என்று கட்சியினர் தம்மிடம் கூறியதாகவும் அவ்வாறு தாம் தேர்வு செய்வது முறை ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
புதிய தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒரு குழுவிடம் ஒப்படைக்குமாறு பதவி விலகிய உடனேயே காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
புதிய தலைவரை தேர்வு செய்ய அவர்களுக்கு தாம் அதிகாரம் அளித்துள்ளதாகவும், சுமூகமான மாற்றத்துக்கு தமது முழு ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளதாவும் ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
போராட்டமும் பெருமையும் நிறைந்த வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியத் தன்மையுடன் இயைந்துள்ளது. துணிவு, அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வழிநடத்துபவரை தலைமையேற்க கட்சி தேர்வு செய்யும் என்று தாம் நம்புவதாக ராகுல் காந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 
எனது போராட்டம் அதிகாரத்துக்கு மட்டுமானதல்ல. எனக்கு பாஜக மீது எனக்கு விதமான வெறுப்போ கோபமோ இல்லை; ஆனால் என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் இந்தியா பற்றிய அவர்களின் கருத்தை உள்ளார்ந்து எதிர்க்கிறது.
 
இந்தியா பற்றிய எனது கருத்தும் அவர்களது கருத்தும் நேரெதிராக உள்ளதால் இந்த எதிர்ப்பு கிளம்புகிறது என்று ராகுல் கூறியுள்ளார்.
 
ராகுல் காந்தி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள மேலதிக கருத்துகள் பின்வருமாறு.


 
இது புதிய போர் அல்ல. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. அவர்கள் வேறுபாட்டை காணும் இடங்களில் நான் ஒற்றுமையைக் காண்கிறேன். அவர்கள் வெறுப்பைக் காணும் இடங்களில் நான் அன்பைக் காண்கிறேன். அவர்கள் எங்கு அச்சப்படுகிறார்களோ, அங்கு நான் ஆரத் தழுவுகிறேன்.
 
அந்த அன்பார்ந்த எண்ணம் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பரவியுள்ளது. இத்தகைய இந்தியாவைத் தான் நாம் தீவிரமாக காக்க வேண்டியுள்ளது.
 
இந்தியா மீதும் இந்திய அரசியலமைப்பு மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் இந்தியா எனும் கருத்தாக்கத்தை அழிக்கும் நோக்குடன் உருவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் இருந்து நான் எப்படியும் பின்வாங்கப்போவதில்லை.
 
காங்கிரஸ் கட்சிக்கு நான் விஸ்வாசமுள்ள தொண்டன் மற்றும் இந்தியத் தாய்க்கு பற்று மிக்க மகன். இந்தியாவை காக்கவும், இந்தியாவுக்கும் தொண்டாற்றவும் என் இறுதி மூச்சு வரை படுபாடுவேன்.
 
நாங்கள் வலிமையாகவும்கண்ணியமாகவும் தேர்தலை எதிர்கொண்டோம். சகோதரத்துவம், சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை மிக்கதாக எங்கள் பிரசாரம் அமைந்தது. பிரதமர், ஆர்.எஸ்.எஸ் ஆகியோரை என் முழு பலத்தையும் திரட்டி எதிர்த்தேன். சில நேரங்களில் நான் அதில் தனியாக இருந்தேன். எனினும் அதுகுறித்து நான் பெருமைப் படுகிறேன்.
 
சுதந்திரமான ஊடகம், நீதித் துறை, நடுநிலை மிக்க வெளிப்படைத்தன்மை மிக்க தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடக்கத் தேவை. ஒரு கட்சியிடம் மட்டுமே நிதி ஆதாரங்கள் குவிந்திருந்தால் தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது.
 
2019இல் ஓர் அரசியல் கட்சியை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுமொத்த இந்திய அரச கட்டமைப்பையே நாங்கள் எதிர்த்தோம். அரசு அமைப்புகளின் நடுநிலைத் தன்மை இனியும் இந்தியாவில் இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
 
இந்திய அரசின் அமைப்புகளை கைப்பற்றும் ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டம் ஈடேறியுள்ளது. நமது ஜனநாயகம் பலவீனமாகியுள்ளது. இனி தேர்தல்கள் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அல்லாமல் வெறும் சடங்காக மாறிவிடும்.
 
இந்தியாவில் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது கற்பனை செய்ய இயலாத அளவுக்கு வன்முறை மற்றும் வலி மிகுந்ததாக இருக்கும்.
 
விவசாயிகள், பெண்கள், பழங்குடிகள், தலித்துகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆகியோர் மிகவும் இன்னலுக்கு உள்ளாவார்கள்.
 
பொருளாதாரம் மற்றும் நாட்டின் பெருமை ஆகியவை மீதான தாக்கம் மோசமானதாக இருக்கும்.
 
நமது அமைப்புகளை மீண்டும் மறுகட்டமைக்க இந்தியா இணைய வேண்டும். அதற்கான கருவியாக காங்கிரஸ் கட்சி இருக்கும்.
 
இந்த முக்கியமான நோக்கத்தை அடைய காங்கிரஸ் கட்சியில் தீவிரமான மாற்றங்கள் தேவை. இந்திய மக்களின் குரலை பாஜக திட்டமிட்டு நசுக்குகிறது. அந்தக் குரல்களை பாதுகாப்பது காங்கிரசின் கடமை. இதற்கு முன்பும், இனி எப்போதும் இந்தியா ஒற்றைக் குரலுடன் இருக்காது. அது பல குரல்கள் கலந்த சிம்பொனியாகவே இருக்கும். அதுதான் பாரதத் தாயின் உண்மையான சாராம்சம்.
 
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து எனக்கு ஆதரவளித்து கடிதம் எழுதிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு என் நன்றிகள்.
 
காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுக்காக என் முழு பலத்தையும் திரட்டி போராடுவதைத் தொடர்வேன்.
 
பதவியின் மீது நாட்டம் கொண்டுள்ளது இந்தியாவில் ஒரு வழக்கமாக உள்ளது. யாரும் பதவியைத் துறக்க விரும்புவதில்லை.
 
பதவி மோகத்தை துறக்காமல், ஆழமான கொள்கை பிடிப்புடன் போராடாமல் நம் எதிரிகளை வீழ்த்த முடியாது.
 
நான் காங்கிரஸ்காரனாகவே பிறந்தேன். இந்தக் கட்சி எப்போதும் என்னுடனும் என் உயிரின் ஆதாரமாகவும் இருந்துள்ளது. அது அவ்வாறே என்றென்றும் நீடிக்கும்.