ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (23:41 IST)

கியூபாவின் கம்யூனிச அரசுக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

கியூபாவில் நெடுங்காலத்துக்குப் பிறகு கம்யூனிஸ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரிய போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களும் எதிர்க்கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
 
பொருளாதாரச் சரிவு, உணவு மற்றும் மருந்துகள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு ஆகியவை காரணமாக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருந்தனர்.
 
இப்போது கொரோனாவை கையாண்ட விதமும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கியூபாவில் அரசுக்கு எதிராகப் பேசுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதால் அங்கு நடந்திருக்கும் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
 
போராட்டங்களுக்கு எதிராகச் சண்டையிடும்படி கியூபாவின் அதிபர் தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். "இங்கு உணவு இல்லை, மருந்து இல்லை, சுதந்திரமும் இல்லை" என போராட்டத்தில் ஈடுபட்ட அலெஜான்ட்ரோ என்பவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
 
"சர்வாதிகாரம் ஒழியட்டும்", "விடுதலை வேண்டும்" என்பன போன்ற முழக்கங்கள் ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன. "எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்" என சான் அன்டோனியாவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
 
அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கற்றவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு சீரூடையில்லாத அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.