பொறியியல் படித்தவர்கள் ஆசிரியர் ஆகலாம்: தமிழக அரசாணைக்கு கிளம்பும் எதிர்ப்புகள்

bbc
Last Modified செவ்வாய், 10 டிசம்பர் 2019 (20:22 IST)
பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, பி.எட். பட்டம் முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ல் பொறியியல் படித்த மாணவர்கள் பி.எட். படித்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாத சூழல் இருந்தது. தற்போது தமிழக அரசின் சமநிலைக்குழு, பொறியியல் பட்டதாரிகள், பி.எட். முடித்தால், 6 முதல் 8ம் வகுப்பு கணித பாடத்திற்கு ஆசிரியராகலாம் என திருத்தம் கொண்டுவந்துள்ளது.

இதுநாள்வரை கலை, அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே ஆசிரியராக இருந்துவந்த நிலையில், இந்த அரசாணை மூலம் பொறியியல் படித்தவர்களும் ஆசிரியராகும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

பொறியியல் துறை மாணவர்கள் பலரும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நேரத்தில் அவர்கள் ஆசிரியராகலாம் என்ற இந்த அரசாணைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துள்ளன.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் அவர்களின் தரத்தை குறைக்கும் விதமாக இந்த அரசாணை அமைந்துள்ளது என விமர்சிக்கிறார் கல்வியாளர் தா. நெடுஞ்செழியன்.

''பொறியியல் கல்லூரிகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் பணம் படைத்த அரசியல்வாதிகள். பொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற எண்ணம் சமூகத்தில் உருவாகியுள்ளது. உண்மையில் நம் நாட்டின் சிறந்த பொதுத்துறை நிறுவனங்களான இஸ்ரோ, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் பணிபுரிய தரமான பொறியாளர்கள் தேவை. இதுபோன்ற வேலைகளுக்கு நம் பொறியியல் பட்டதாரிகளை தயார் செய்வதற்கு பதிலாக, அவர்களை பள்ளிக்கூட ஆசிரியராக்குவது முறையல்ல. இந்த அரசாணை அரசியல்வாதிகள் நடத்தும் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு வருமானத்தை ஈட்டித்தரும். மற்றபடி பயனில்லை,'' என்கிறார்.

மேலும் பொறியியல் பட்டதாரிகளை ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கவேண்டிய தேவை உள்ளது என்றும் உலகளவில் பொறியியல் துறை பல முன்னேற்றங்களை அடைந்து, பெருவாரியான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்கிறார் நெடுஞ்செழியன்.

bbc

''இந்தியா இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு. இங்குள்ள பொறியியல் மாணவர்களின் திறமையை அதிகரித்து உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சி மற்றும் பொறியாளர் பணிகளுக்கு அவர்களை தயார் செய்வதை விடுத்து, ஆசிரியர்களாக மாற்றுவது மேலும் அவர்களின் நம்பிக்கையை குலைக்கும்,'' என்கிறார் நெடுஞ்செழியன்.

எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் அவதிப்படும் பட்டதாரி சந்தியா. பொறியியல் துறையில் வேலை கிடைக்கும் என்பதால், பெற்றோர் கடன் வாங்கி படிக்க வைத்ததாகவும், மூன்று ஆண்டுகளாக வேலையில்லாததால் வீட்டில் டியூஷன் நடத்துவதாக சொல்கிறார் சந்தியா.

''திருவள்ளூரில் ஒரு தனியார் கல்லூரியில் படித்தேன். தொடக்கத்தில், பல கனவுகள் இருந்தன. ஆனால் கல்லூரியில் தரமான பாடத்திட்டம் இல்லை. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நான் வீட்டில் டியூஷன் எடுக்கிறேன். பி.எட். படித்துவிட்டு, டெட் பரீட்சை எழுதினால் வேலை கிடைக்கும் என நம்புகிறேன். என் பெற்றோரும் என்னை வெளியிடங்களுக்கு வேலைக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். இந்த அரசாணை என்னை போன்றவர்களுக்கு உதவும்,'' என்கிறார் சந்தியா.

ஏற்கனவே கலை, அறிவியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ள நேரத்தில், பொறியியல் துறை மாணவர்களும் ஆசிரியர் ஆகலாம் என்ற முடிவு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை மேலும் குறைக்கும் என்கிறார் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியாளராக பணிபுரியும் கண்ணன்.

''படித்தவர்கள் குறைவாக இருந்த காலத்தில், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் வேலை கொடுக்கப்பட்டது. முன்னர், வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தன, படித்தவர்கள் குறைவாக இருந்தார்கள். தற்போது படித்தவர்கள் அதிகமாக உள்ளனர் என்ற நிலையில், ஆசிரியர் வேலைக்கு மேலும் போட்டியை அதிகரிப்பதற்கு பதிலாக, பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை அரசாங்கம் உருவாக்கவேண்டும்.

பல நாடுகளில் இருந்து முதலீடுகளை கொண்டுவருவதாக அமைச்சர்கள் பயணம் செய்கிறார்கள். நம் இளைஞர்களை பணிக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விதியை ஏன் இவர்கள் உருவாக்கக்கூடாது,'' என கேள்வி எழுப்புகிறார் கண்ணன்.இதில் மேலும் படிக்கவும் :