ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (09:18 IST)

இந்திரா இந்தியாவுக்கு 'எமெர்ஜென்சி' அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது?

(ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை 1977ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதுதொடர்பான இந்த கட்டுரையை மீள் பகிர்வு செய்கிறோம்.)

1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.

பிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.

1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.

நாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.


கடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது.

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் 'ஹிட் லிஸ்டில்' தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.

பிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்".

இந்த விடயத்தில் தனது சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேவுடன் அவர் ஆலோசனை கலக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல்! தனது அமைச்சரவை சகாக்களுடனும் பிரதமர் விவாதிக்கவில்லை.

அரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.


இந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.

உள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.

எமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார் இந்திரா. அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.

நெருக்கடி நிலை தொடர்பான முன்மொழிவை குடியரசுத் தலைவரிடம் வழங்குமாறு இந்திரா காந்தி சித்தார்த் ஷங்கர் ராயிடம் கூறினார்.


இதுபற்றி கேதரின் பிராங்க் ''இந்திரா' என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார், 'இந்திராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், நான் மேற்கு வங்க மாநில முதலமைச்சர், இந்தியப் பிரதமர் அல்ல' என்று கூறிவிட்டார்.

ஆனால், குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும்போது இந்திராவுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.

குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.

இந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.

நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.

பிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.

காலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

அமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார். இதை இந்திரா காந்தி சொல்லும்போது ஏற்கனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.



அடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.

அவர்கள் இருவரும் இருந்த அறைக்கு இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி அடிக்கடி வந்துசென்றார். ஓரிரு முறை இந்திராவை அறைக்கு வெளியே அழைத்து தனியாக 10-15 நிமிடங்கள் பேசினார் சஞ்சய் காந்தி.

கொரோனா வைரஸ் வரைபடம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 24 ஜூன், 2020, பிற்பகல் 9:00 IST

தவணின் அறையில் அமர்ந்து ஓம் மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த பட்டியலைப் பற்றி பேசவும், ஒப்புதல் வாங்கவுமே சஞ்சய் அடிக்கடி தாயின் அறைக்கு வந்து சென்றார்.

அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சார இணைப்பை எப்படி துண்டிப்பது, பத்திரிகைகளை எவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்துவது போன்ற திட்டங்களையும் இந்த மூவர் அணி உருவாக்கியது.

இந்திரா காந்தி வானொலியில் ஆற்றவேண்டிய உரையை தயாரித்து முடிக்கும்போது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.

பத்திரிகை தணிக்கை
பிறகு இந்திராவின் வீட்டிலிருந்து புறப்பட்ட ராய், வாயிலை அடையும்போது ஓம் மேத்தாவை சந்தித்தார். அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்ற திட்டங்கள் பற்றி அவர் கூறினார்.

இதைக்கேட்ட ராய் உடனடியாக அதை எதிர்த்தார், "இது வினோதமான முடிவு, நாங்கள் இதைப் பற்றி பேசவேயில்லை, நீங்கள் இவ்வாறு செய்ய முடியாது" என்று கடிந்துகொண்டார்.

இந்திராவின் வீட்டிற்குள் சென்ற ராய் மீண்டும் இந்திராவை சந்திக்க விரும்புவதாக சொன்னார். அவர் படுக்கைக்கு சென்றுவிட்டார் என்று தவண் கூறியபோதிலும், 'நான் கண்டிப்பாக அவரை சந்திக்க வேண்டும்' என்று ராய் வலியுறுத்தினார்.

வேறுவழியில்லாமல் தயக்கத்துடன் இந்திரா காந்தியை அழைத்தார் தவண். பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவது பற்றிய மேத்தாவின் திட்டத்தை இந்திராவிடம் சொன்னபோது அவருக்கு கடும்கோபம் ஏற்பட்டது.

ராயை காத்திருக்கச் சொன்ன இந்திரா அறையில் இருந்து வெளியே சென்றார். இதற்கிடையில், தவணின் அறையில் இருந்து பன்சிலாலுக்கு தொலைபேசி செய்த சஞ்சய், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை ராய் எதிர்க்கிறார் என்று சொன்னார்.

அதற்கு பதிலளித்த பன்சிலால் "ராயை முதலில் வெளியில் அனுப்புங்கள், அவர் காரியத்தையே கெடுத்துவிடுவார். தன்னை மிகப்பெரிய வக்கீலாக நினைத்துக்கொள்கிறார் ராய். ஆனால் அவருக்கு ஒன்றும் தெரியாது" - இவை ஜக்கா கபூரின் 'What price perjury: ஷா ஆணையத்தின் உண்மைகள்' புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை.

இந்திராவுக்காக ராய் காத்துக்கொண்டிருந்தபோது, ஓம் மெஹ்தா அவரிடம் சொன்னார், 'பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்'.

இந்திரா திரும்பிவந்தபோது அவரின் கண்கள் சிவந்து காணப்பட்டன. "சித்தார்த், மின்சாரம் துண்டிக்கப்படாது, நீதிமன்றங்கள் மூடப்படாது" என்று கூறினார்.

எல்லாம் சரியாகவே நடக்கிறது என்ற திருப்தியுடன் இந்திராவின் வீட்டிலிருந்து வெளியேறினார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சித்தார்த் ராய்.

ஜே.பி கைது

ஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திரா உறங்கச் சென்றபோது, கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் மொராஜி தேசாய் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ், பிகார் மாநில அரசியல் தலைவரும், ஜெயபிரகாஷ் நாராயணனின் சகாவுமான கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை.

டெல்லி பகதூர் ஷா ஜாஃபர் மார்கில், செய்தித்தாள்கள் அச்சில் ஏறும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் ஆகியவை மற்றுமே வெளியாகின, ஏனெனில், அவை மட்டும்தான் பகதூர் ஷா ஜாஃபர் மார்க் சாலையில் இல்லை.

முதல் நாள் பரபரப்பாக இயங்கிய இந்திரா காந்தி சில மணி நேரமே ஓய்வெடுத்தபோதிலும், அடுத்த நாள் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது உற்சாகமாகவே காணப்பட்டார்.

அந்த கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் டெல்லியில் இல்லை.

அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.

ஸ்வர்ண் சிங்கின் கேள்வி

அமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்?' என்பதுதான்.

அதற்கு இந்திரா மெல்லிய குரலில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலை அங்கு அமர்ந்திருந்த பிற அமைச்சர்களால் கேட்கவே முடியாத அளவுக்கு கட்டுப்பாடான குரலில் பதிலளித்தார் இந்திரா.

அப்போது, சில நிமிடங்களுக்கு தனது குரலை கட்டுப்படுத்திய இந்திரா காந்தி, தொடர்ந்து பல மாதங்கள் வரை நெருக்கடி நிலையை தொடர்ந்து நாட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கூட்டத்தில் வேறு எந்த எதிர்கேள்வியும் எழுப்பப்படவில்லை, 'எமர்ஜென்சிக்கு அனுமதி கொடுக்கும் அமைச்சரவை கூட்டம் வெறும் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது' என்று 'த எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி' என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார்.

எமர்ஜென்சியை எதிர்த்து யாரும் சாவல் விடவில்லை. சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை, 'When I implied the Emergency Not Even a Dog breached'.