டெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் போராடும் விவசாயிகளுக்கு உள்ள சவால்கள்

Prasanth Karthick| Last Modified புதன், 27 ஜனவரி 2021 (17:54 IST)
இந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும், விவசாயிகளின் குடியரசு நாள் டிராக்டர் பேரணியின்போது டெல்லியில் பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் போராட்டக்காரர்கள் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இப்போது வரை, விவசாயிகளின் ஒற்றுமை, பல்வேறு சித்தாந்தங்களின் ஒருங்கிணைவு மற்றும் அமைதியான போராட்டம் இந்த விவசாய இயக்கத்தின் பலங்களாக கருதப்பட்டன.

ஆனால் ஜனவரி 26 நிகழ்வுகள், குறிப்பாக செங்கோட்டையில் சீக்கியர்களின் 'நிஷான் சாகிப்' கொடி மற்றும் விவசாய சங்க கொடிகளை ஏற்றி வைத்தது இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜனவரி 26 விவசாயிகள் டிராக்டர் பேரணியைத் தொடர்ந்து, விவசாயி தலைவர்கள் இந்த நான்கு முக்கிய சவால்களை எதிர்கொள்வார்கள்.

விவசாயி போராட்டக்காரர்களிடையே ஒற்றுமை

விவசாய போராட்டக்காரகளுக்கும் அமைப்புகளுக்கும் இடையில் ஒற்றுமையை நிலைநிறுத்துவது, விவசாயி தலைவர்களுக்கு இப்போது ஒரு பெரிய சவாலாக இருக்கும். பாரதிய விவசாய சங்கம் உக்ரஹான் பிரிவு மற்றும் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் சமிதி ஏற்கனவே தங்கள் தனிப்பட்ட திட்டங்களை வழங்கி வருகின்றன.

ஆனால் கிசான் டிராக்டர் பேரணி விஷயத்தில், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் சமிதி , ஐக்கிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக கிளர்ச்சிக் குரலை முன்னரே எழுப்பியது. .

இருப்பினும், தாங்கள் ஐக்கியக் கூட்டமைப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக சங்கத்தின் பஞ்சாப் மாநில பொதுச் செயலர் சர்வன் சிங் பந்தேர் தெரிவித்தார்.

ஆனால் டெல்லி காவல்துறையினர் ஒப்புதல் அளித்த, ஐக்கிய கூட்டமைப்பு ஒப்புக்கொண்ட பேரணி பாதையில் தங்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த முடிவு , அவர்கள் ரிங் ரோட் மற்றும் செங்கோட்டையை அணுகுவதற்கு அடிப்படையாக அமைந்தது. ரிங் ரோடில் சர்வன் சிங் பந்தேர் சார்பாக நடந்த பேரணிக்குப் பிறகுதான், மாலை நேரத்தில், சிங்கு எல்லையில் உள்ள ஐக்கிய கூட்டமைப்பு மேடையில் ஒரு பெரிய கூட்டம் கூடி, ரிங் ரோடில் பேரணி நடத்தும் அறிவிப்பை வெளியிட்டது.

ஐக்கிய கூட்டமைப்பின் பேரணிக்கு முன்பே, இவர்கள் தடுப்பரண்களை உடைத்து டெல்லிக்குள் நுழைந்தனர், செங்கோட்டைக்கு செல்வது தங்கள் திட்டம் அல்ல என்று அதன் பிறகும் சர்வன் சிங் பந்தேர் கூறிக்கொண்டே இருந்தார்.

இந்த தனித் திட்டம் அப்போதுவரையிலான அமைதியான போராட்டத்திற்கு கடுமையான தீங்கு விளைவித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், விவசாயிகள் சங்கம் மற்றும் போராட்டகாரர்கள் கூட்டு நடவடிக்கை எடுப்பதில் வெற்றி பெறுவார்களா என்ற. கேள்வி எழுந்துள்ளது.

இளைஞர்களை ஒழுங்குபடுத்துதல்

விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தும் விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்களுக்கு மிகப்பெரிய சவால், இயக்கத்தில் ஈடுபடும் இளைஞர்களை ஒழுங்குபடுத்துவதாகும்.

"நாங்கள் டெல்லி செல்லும் பாதையில்தான் பேரணி செல்வதாக இருந்தோம். ஆனால் இளைஞர்கள் வேறு பாதையில் சென்றுவிட்டனர். எனவே நாங்களும் திரும்பி வர வேண்டியதாயிற்று. என்னதான் இருந்தாலும் அவர்கள் எங்கள் குழந்தைகள், "என்று விவசாயிகள் டிராக்டர் பேரணிக்குப் பிறகு பிபிசி பஞ்சாபியுடன் பேசிய விவசாயி தலைவர் மஞ்சித் சிங் ராய் தெரிவித்தார்.

தலைவர்கள் வழங்கிய திட்டத்திலிருந்து விலகி பல இளம் விவசாயிகள் வேறுபட்ட பாதையைத் தேர்வு செய்தார்கள் என்பது மஞ்சித் சிங்கின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது.

இளைஞர் தலைமை என்ற பெயரில், இந்த இயக்கத்தில் விவசாயி அமைப்புகள் தங்களுக்கு அருகே கூட வர அனுமதிக்காத பல தலைவர்கள் உள்ளனர். செங்கோட்டையை அடைந்தபோது, அதே தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றுவதைக் காணமுடிந்தது.

போராட்டத்தின் வரவிருக்கும் நாட்களில், அத்தகைய நபர்களின் நடவடிக்கைகளில் இருந்து இளைஞர்களைப் பாதுகாப்பது விவசாயி தலைவர்களுக்கு கடினமான சவாலாக இருக்கும்.

அரசு மீது தொடர்ச்சியான நெருக்குதல்

நவம்பர் 26 பேரணிக்குப்பிறகு இந்த விவசாயி டிராக்டர் பேரணி , மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்பட்டது. இந்த நடவடிக்கை தொடர்பாக அரசும் பெரும் அழுத்தத்தில் இருந்தது. இந்த அழுத்தத்தின் விளைவாக, விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றரை ஆண்டுகள் ஒத்திவைக்கவும் அரசு முன்வந்தது.

விவசாயிகள் இந்த யோசனையை நிராகரித்தபோது, அரசு பேச்சுவார்த்தைகளை நிறுத்தியது. ஜனவரி 26 நடவடிக்கைக்குப் பின்னர் அரசின் மீது அதிக அழுத்தம் இருக்காது என்பதால், போராட்டம் நீண்ட காலம் நீடிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தலைவர் ஹனன் மோல்லா ஜனவரி 26 விவசாயி டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையை ஒரு குற்றவியல் செயல் மற்றும் அரசின் சதி என்றும் அழைத்தார். விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்துவதற்காக இது செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

மறுபுறம், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஊடுருவியதாக ஆளும் பாஜகவின் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிலைமையை மறுஆய்வு செய்ய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர கூட்டத்தை நடத்திய போதிலும், அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

ஹனன் மோல்லாவின் கருத்துக்கள் சரியென்றால், அரசு விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் சாத்தியகூறு குறைவே என்று தோன்றுகிறது.

ஜனவரி 26 விவசாயி டிராக்டர் பேரணிக்குப் பிறகு , அரசை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர நிர்பந்திக்கும் பெரிய நடவடிக்கையை விவசாயிகள் எடுப்பார்களா?

விவசாயி டிராக்டர் பேரணிக்கு முன்பே பல்பீர் சிங் ராஜேவால் இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 முதல் தொடங்கும். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். அதே நாளில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி கால்நடையாக அணிவகுத்துச் செல்வார்கள். என்று ஜனவரி 25 மாலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறியிருந்தார்.

அடுத்த திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இயக்கம் பலவீனமடைவதைத் தடுத்தல்

நடப்பு சூழ்நிலைகளை பார்க்கும்போது, போராட்டம் தொடருமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

டிராக்டர் பேரணிக்கு முன்னதாக மேடையை ஆக்கிரமித்து செங்கோட்டையை அடைந்த நபர்கள் இனி என்ன செய்வார்கள், விவசாய அமைப்புகள் அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது மிகவும் தீவிரமான கேள்வி.

அமைதியான போராட்டத்தை அதன் மிகப்பெரிய சக்தியாக மக்கள் பார்த்தார்கள். "நாம் அமைதியாக இருந்தால் வெற்றிபெறுவோம், வன்முறையில் ஈடுபட்டால் மோதி வெற்றி பெறுவார்" என்ற முழக்கத்தை விவசாயிகள் அளித்துவந்தனர்.

ஆனால் இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக போராட்டம் இனி தொடருமா, அரசு நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் இப்போது சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்புகின்றனர்.

ஆனால் போராட்டம் தொடர்ந்து அமைதியாக நடைபெறும் என்று விவசாயி தலைவர்கள் மஞ்சீத் சிங் ராய் மற்றும் சர்வன் சிங் பந்தேர் ஆகியோர் கூறியுள்ளனர்.

"செங்கோட்டையில் நடந்ததற்கு நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்று ஐக்கிய முன்னணி தலைவர் சிவகுமார் கக்கா செய்தியாளர்களிடம் கூறினார்.

"டிராக்டர் பேரணியின் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் சென்றவர்களும், இந்த வேலையைச் செய்த அமைப்புகளும் ஐக்கிய முன்னணியின் ஒரு பகுதி அல்ல, டிராக்டர் பேரணி பற்றிய அறிவிப்பை நாங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே வெளியிட்டுவிட்டோம்,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"காவல்துறையினர் முன்கூட்டியே பேரணிப்பாதை பற்றி விவாதித்திருக்க வேண்டும். அவர்கள் கவனக்குறைவாக இருந்தனர். ஐக்கிய முன்னணியைத் தவிர போராட்டத்தில் ஈடுபட்ட பிற அமைப்புகளுடனும் காவல்துறை பேசியிருக்க வேண்டும்,"என்றார் அவர்.

போராட்டம் தொடரும் என்றும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் பின்வாங்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபடத்தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :