வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (00:26 IST)

நெருக்கடி : ரணிலிடம் மன்னிப்புக் கேட்ட கோட்டாபய - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்த நிகழ்வு

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சி மாநாடொன்று இன்று முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மன்னிப்புக் கோரினார்.
 
ஜனாதிபதி மாளிகையில் இந்த மாநாடு புதன்கிழமை முற்பகல் முதல் பிற்பகல் வரை நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த சர்வகட்சி மாநாட்டை பல அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்தன. குறிப்பாக பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய மாநாட்டை புறக்கணித்தது.
 
அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த மாநாட்டை புறக்கணித்திருந்தன.
 
அதேவேளை, அரசாங்கத்தின் பங்காளி கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இந்த மாநாட்டை புறக்கணித்திருந்தது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இன்றைய மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்தன.
 
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது எப்படி? - ஓர் எளிய விளக்கம்
 
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட மத்திய வங்கி ஆளுநர், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து முதலில் கருத்து வெளியிட்டார்.
 
''2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் பொருளாதார முன்னேற்ற வேகமானது, படிப்படியாக 7 வீதத்திலிருந்து 2 வீதம் வரை வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு கடன் 15 பில்லியன் அமெரிக்க டொலரினால் அதிகரித்தது. அந்நிய செலாவணி கையிருப்பானது, ஒரு பில்லியன் அமெரிக்க டொலரினால் வீழ்ச்சி அடைந்தது. இவ்வாறு வீழ்ச்சி கண்ட இலங்கையின் பொருளாதாரத்திற்கு கோவிட் வைரஸின் தாக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்கொள்ளும் சக்தி உண்மையில் இலங்கைக்கு இருக்கவில்லை. எதிர்வரும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் நாடு என்ற விதத்தில், நாம் எடுக்கும் தீர்மானங்கள் எமது நாட்டை எதிர்காலத்தையே பாதிக்கும்" என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
 
இதற்கு குறுக்கிட்டு பதிலளித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், 2015 முதல் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பிரதமராக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.
 
''நாம் இந்த இடத்திற்கு வருகை தந்ததானது, உண்மையிலேயே நாடு எதிர்நோக்கியுள்ள இந்த உக்கிரமான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்கு, எனினும், கட்சி அரசியலுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து கலந்துரையாட நாம் இந்த இடத்திற்கு வருகை தரவில்லை. மத்திய வங்கி ஆளுநர் கூறியதை போன்று குறுகிய அரசியல் நோக்கத்தை கொண்டு நாம் வரவில்லை. இது கடந்த அரசாங்கத்தின் பிழை என்ற விதத்திலேயே அவர் தனது கருத்தை ஆரம்பித்திருந்தார். நான் அதற்கு பதில் வழங்கியுள்ளேன். இறுதியில் விஜயன் இலங்கைக்கு வரவில்லை என்றால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்பதே பதிலாக அமையும். ஏன் நாம் கடந்த காலத்தை நோக்கி செல்ல வேண்டும். இது குறித்து நான் ஒன்றே ஒன்று மாத்திரம் கூற வேண்டும். நாம் வேறு கொள்கைகளுடன் பயணித்தோம். அந்த காலப் பகுதியில் மக்களுக்கு உணவு இருந்தது. பெட்ரோல் இருந்தது. இதற்கு மேல் ஒன்றும் கூற போவதில்லை" என ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.
 
இதேவேளை, பல கட்சிகள் இந்த மாநாட்டிற்கு சமூகமளிக்கவில்லை என கூறிய அவர், மாநாட்டிற்கு வருகைத் தராதவர்களை தோற்கடிக்க தான் வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.
 
இந்த மாநாட்டிற்கு வருகைத் தந்து, கருத்துக்களை பகிர்ந்து, அதனை மாநாட்டிற்கு வருகைத் தராதவர்களிடம் கூறி, அவர்களையும் இணைத்துக்கொள்வதற்காகவே தான் வருகைத் தந்ததாக அவர் கூறினார்.
 
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்பு கோரினார்.
 
''உங்களின் மனம் வேதனைப்பட்டிருக்கும் பட்சத்தில், நான் மன்னிப்பு கோருகின்றேன். ஒரு நடைமுறையின் பிரகாரமே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். அதைவிடுத்து யாருக்கும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க அவர் அந்த கருத்தை வெளியிடவில்லை" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
 
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.
 
 
எனினும், சர்வதேச நாணய நிதியம் அவ்வாறான அறிக்கையை இதுவரை தமக்கு அனுப்பவில்லை என பஷில் ராஜபக்ஸ முதலில் கூறிய நிலையில், குறுக்கிட்டு ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த பஷில் ராஜபக்ஸ, சர்வதேச நாணய நிதியத்தினால், வரைவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
சர்வதேச நாணய நிதியத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட வரைவை, நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க கோரிய நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
 
சர்வதேச நாணய நிதியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வரைவை, தாம் சவாலுக்கு உட்படுத்தியுள்ளமையினால், அதனை பகிரங்கப்படுத்த முடியாது என பஷில் ராஜபக்ஸ கூறினார்.
 
இலங்கை பொருளாதார நெருக்கடி
பட மூலாதாரம்,PMD
இதேவேளை, 2020ம் ஆண்டு அபிவிருத்தியை இலக்காக கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்கு பதிலாக புதிய வரவு செலவுத்திட்டமொன்றை முன்வைக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளன.
 
இதனை ஏற்றுக்கொண்ட பஷில் ராஜபக்ஸ, எதிர்வரும் தமிழ் - சிங்கள சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் புதிய வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சரவை அனுமதி வழங்கும் பட்சத்தில், தான் விரைவில் புதிய வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார்.
 
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாத ஏனைய கட்சிகளும், இந்த மாநாட்டில் எதிர்காலத்தில் கலந்துக்கொண்டு தமது நிலைப்பாட்டை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, கட்சிகளிடம் அழைப்பு விடுத்துள்ளார்.