ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (09:09 IST)

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: கடைசி நேரத்தில் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறியது ஏன்?

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் சிபி 12 லட்சம் பணத்துடன் வெளியேறியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. இறுதி போட்டியாளராக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சிபி எடுத்திருக்கும் இந்த முடிவு சரியானதுதானா?
 
இறுதி கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 95 நாட்களை கடந்திருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்க இன்னும் சில வாரங்களே இருக்கக்கூடிய நிலையில், கடந்த வாரம் 'வைல்ட் கார்ட்' எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நடிகர் சஞ்சீவ் குறைந்த மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு முந்தைய வாரம் வருண் மற்றும் அக்ஷரா இருவருமே ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டார்கள்.
 
இந்த நிலையில், தற்போது ராஜூ, பிரியங்கா, தாமரை, பாவனி, நிரூப், அமீர், சிபி என ஏழு போட்டியாளர்கள் இறுதிக்கட்டத்தில் இருந்தனர். இதில் அமீர் கடந்த வாரம் நடந்த 'Ticket To Finale' டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். தற்போது ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
 
வழக்கமாக இறுதிக்கட்டத்தில் ஐந்து பேர் இருப்பார்கள். இப்போது ஏழு பேர் இருக்கும் நிலையில், இறுதி நிலைக்கு போட்டியாளர்களை அனுப்பும் முன்பு பிக்பாஸ் 'Cash Box' மூலமாக பணம் தந்து ஒருவர் அதை எடுத்து கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்பதை அறிவிப்பார். குறிப்பிட்ட நேரத்தில் எந்த போட்டியாளர்களும் இதை எடுக்கவில்லை என்றால் அடுத்தடுத்து பணம் அதிகரித்து கொண்டே போகும்.
 
அப்படி கடந்த இரண்டு சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா இந்த பணத்தை எடுத்து கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்கள். முதல் இரண்டு சீசன்களில் போட்டியாளர்கள் யாரும் இந்த பணத்தை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மூன்றாவது சீசனில் கவின் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறியது யாரும் எதிர்ப்பார்க்காத முடிவு என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை அப்போது சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர்.
அதுவே, நான்காவது சீசனில் இந்த பணப்பெட்டியை கேபி எடுத்து சென்ற போது அது புத்திசாலித்தனமான முடிவு என்ற பலரது கருத்தையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.
 
பணப்பெட்டி எடுக்க சிபி சொன்ன காரணம் என்ன?
 
இந்த நிலையில், இந்த ஐந்தாவது சீசனில் பணப்பெட்டியை போட்டியாளர்கள் முன்பு வைக்கும் நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் நடிகர் சரத்குமார் சிறப்பு விருந்தினராக உள்ளே வந்தபோது போட்டியாளர்களுக்கு மூன்று லட்சத்திற்கான பெட்டியை வைத்தார்.
 
ஆனால், போட்டியாளர்கள் யாரும் எடுக்க முன்வராத நிலையில் அடுத்தடுத்து ஐந்து, ஆறு, ஒன்பது, 12 லட்சம் என பணத்தை அதிகரித்து கொண்டே சென்ற போது சிபி 12 லட்சத்தை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்தார்.
 
இறுதி போட்டிக்கு தான் செல்வேன் என்றாலும் போட்டியில் பயம் மற்றும் தன் மீதான நம்பிக்கை குறைவாக உள்ள காரணத்தால் பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக கூறினார்.
 
"தாமரையின் குடும்ப பின்னணியை மனதில் கொண்டு, பணத்தை எடுப்பதற்கு முன்பு அவர்குறித்து மட்டுமே யோசித்தேன். ஆனால் தாமரை பிக்பாஸ் வீட்டில் இருக்க விரும்புகிறார். எனது தன்னம்பிக்கை குறைந்துவிட்டது; இதற்கு பின் இந்த வீட்டில் வெற்றி பெறுவேன் என்று பொய்யாக நடித்து என்னால் இருக்க முடியாது," என தெரிவித்து விட்டு வெளியேறினார் சிபி.
 
சிபி முடிவு சரியானதுதானா?
 
இந்த வாரம் பாவனியோ அல்லது நிருப்போ வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், சிபி எடுத்த இந்த முடிவு பார்வையாளர்கள் யாருமே எதிர்ப்பார்க்காதது. இது குறித்து செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் தமிழ் 3வது சீசனின் போட்டியாளருமான ஃபாத்திமா பாபுவிடம் பேசினோம்.
 
"என்னை கேட்டால் சிபி எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு என்றுதான் சொல்வேன். சிபிக்கு தான் ஒரு வலுவான போட்டியாளர் இல்லை என்பது தெரிந்திருக்கிறது. பாவனி, நிரூப், அமீர் இவர்களுக்கு எல்லாம் நிச்சயமாக தான் டைட்டில் வின்னர் இல்லை என்பது தெரிந்திருக்க வேண்டும். இதை உணர்ந்தே புத்திசாலித்தனமாக 12 லட்சம் வரும்போது சிபி இந்த பணத்தை எடுத்திருக்கிறார். அதாவது மூன்று, ஐந்து, ஆறு லட்சம் இதெல்லாம் வரும்போது அவசரப்பட்டு எடுக்காமல் 'ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு' என்பதற்கு ஏற்ப பொறுமையாய் காத்திருந்து எடுத்திருக்கிறார்." என்றார்.
 
ஆனால், சிபி ரேங்க் டாஸ்க் உட்பட சமீபத்திய எபிசோட்களில் சிறப்பாகவே விளையாடி இறுதி போட்டிக்கு போவார் என எதிர்பார்க்கப்பட்டதே? என்ற கேட்டதற்கு,
 
"ஆமாம், நிச்சயம் சிபி இறுதி போட்டியில் இருந்திருப்பார். ஆனால் வெற்றியாளராக இருந்திருப்பாரா என்றால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். இறுதி போட்டிக்கு வந்திருந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். டைட்டில் வெற்றியாளர்கள் என கருதப்படும் ராஜூ, பிரியங்கா, தாமரை இவர்களில் யாராவது ஒருவர் எடுத்திருந்தால்தான் முட்டாள்தனமாக செய்து விட்டார்களே என நினைக்க தோன்றும்," என்றார்.
 
அதேசமயம் போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச் செல்வி இந்த பணத்தை எடுத்திருக்கலாமே என சமூக வலைதளங்களில் சிலர் பேசி வருவது குறித்து கேட்டபோது,
 
"தாமரைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலை எல்லாரையும் விட மிக பிடித்திருக்கிறது. இதுவரை பார்த்த சூழலுக்கு மாறாக இருக்கும் பிக்பாஸ் வீட்டை பிடித்திருப்பதில் தவறில்லை. இது தற்காலிகம் எனும்போதும் இன்னும் 10-12 நாட்கள்தான் இருக்க போகிறோம் என்ற நினைப்பால் பணம் எடுக்க வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம். மேலும் அவருக்கு வெற்றிப்பெற வேண்டும் என்ற உத்வேகமும் உண்டு. அதனால், ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை காரணமாக கூட பணத்தை எடுக்காமல் இருந்திருக்கலாம்.
 
வெளியில் இருந்து பார்க்கும் நமக்குதான் தெரியும் தாமரை எடுத்திருந்தால் அவரது குடும்ப பின்னணிக்கு நன்றாக இருந்திருக்கும் என்று. ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது இயல்பாக ஒரு நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கைதான் பிரியங்காவை, ராஜூவை எடுக்க விடாமல் தடுத்தது. இவர்களை தாண்டி அமீர் இந்த பணத்தை எடுத்திருந்தாலும் புத்திசாலித்தனமான முடிவு என்றுதான் சொல்லியிருப்பேன். ஏனென்றால், ஆட்டத்தின் பாதியில் இருந்து வந்து வெறும் 50 நாட்களில் எல்லாம் நிகழ்ச்சியின் வெற்றியாளராக பிக்பாஸ் வரலாற்றில் யாரும் இருந்ததில்லை. அதனால், இந்த பணம் நிச்சயம் அமீருக்கு உதவியிருக்கும். ஆனால், அவர் அதை எடுக்கவில்லை. அதற்கு முன்பு சிபி எடுத்து விட்டார்".