வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:22 IST)

அமித்ஷா: வீட்டில் தாய்மொழியிலேயே பேசுமாறு அறிவுறுத்திய உள்துறை அமைச்சர்

Amitshah
(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(29/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)

"மாணவர்களும் இளைஞர்களும் எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். ஆனால், உங்கள் தாய்மொழியை பாதுகாத்திடுங்கள். வீட்டில் தாய்மொழியிலேயே பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்," என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அதுகுறித்த செய்தியில், "புதிதாக பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். நாட்டையும் சமூகத்தையும் மேம்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும். வாழ்வில் நீங்கள் திருப்தியும் சந்தோஷமும் பெற வேண்டுமானால், மற்றவர்களுக்காக உழைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்.

மாணவர்களும் இளைஞர்களும் எந்த மொழியில் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம். ஆனால் உங்கள் தாய்மொழியைப் பாதுகாத்திடுங்கள். வீட்டில் தாய்மொழியிலேயே பேசுவதை, எழுதுவதை, படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அரசும், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் படிப்புகளை பிராந்திய மொழிகளில் கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

நாட்டின் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு அறிவையும் திறனையும் வழங்கும் நோக்கில் புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவை நாடு கொண்டாடும் இவ்வேளையில் மாணவர்கள் பட்டம் பெறுவது முக்கியமானது. மாணவர்கள் பெறும் பட்டம் அவர்களுக்குப் பயன்கொடுக்கும். அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களித்தால், ஒட்டுமொத்த நாடும் பயன் பெறும்," என்று அமித் ஷா பேசியதாகக் கூறப்பட்டுள்ளது.

"முதல்வராக வேண்டுமென்ற எண்ணம் இல்லை" - ஓபிஎஸ்

"ஒரு தனிப்பட்ட நபரோ, குழுவோ, கூட்டமோ அல்லது ஒரு குடும்பமோ இந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தால், அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொண்டர்களைச் சந்தித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. அப்போது பேசியவர், "நான் முதல்வராக வேண்டும். நான் தான் தலைவராக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்து பயணித்தவர்கள், இந்த இயக்கத்திற்காக உழைத்தவர்கள் அனைவரையும் ஒன்று சேருங்கள்.

கடந்த 1973-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பட்டப்பகலில் வத்தலகுண்டு ஆறுமுகம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படி பல்வேறு தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம் இது.

ஒரு தனிப்பட்ட நபரோ, குழுவோ, கூட்டமோ அல்லது ஒரு குடும்பமோ இந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தால், அதிமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்று அவர் கூறியுள்ளார்.

'கைப்பாவை தலைவர் பொறுப்பேற்றால் காங்கிரஸ் பிழைக்காது'

கைப்பாவை தலைவர் பொறுப்பேற்றால் காங்கிரஸ் பிழைக்காது என்று அக்கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவாணும் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த செய்தியில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி வெளியிட்ட 23 தலைவர்களில் ஒருவரான பிருத்விராஜ் சவாண், "காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் அவசியம். பின்னணியில் இருந்துகொண்டு கட்சியை இயக்குவது பலனளிக்காது.

கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பாவிட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். உள்கட்சித் தேர்தல் மூலம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதேபோல் அனைத்து பதவிகளுக்கும் உரிய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கைப்பாவை தலைவர் பொறுப்பேற்றால், கட்சி பிழைக்க வாய்ப்பில்லை," என்று கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழுவில் இருந்த குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்து விலகியது குறித்த கேள்விக்கு, "ஆசாத்தின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. அதற்காக அவரை விமர்சிப்பதோ, கட்சியில் அவருக்கு செல்வாக்கு இல்லை எனக் கூறுவதோ தவறானது. ஆசாத்தின் விலகல் கடிதத்தில் சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து எதுவும் கூற விரும்பவில்லை," என்று சவாண் கூறியுள்ளார்.