வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (13:52 IST)

சீன அரசு மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க மாகாணம்

வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் மிசௌரி மாகாணம் வழக்கு தொடுத்துள்ளது.
 
சீன அரசு கோவிட்-19 தொற்று குறித்து உலகுக்கு பொய் சொன்னதாகவும், முன்னரே எச்சரிக்கை விடுத்தவர்களை மௌனித்ததாகவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்றும் அந்த மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
 
சீனா இந்த பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்கள் மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள், பொருளாதார இழப்பு ஆகியவற்றுக்கு சீன அரசிடம் அந்த மாகாண அரசு இந்த வழக்கு மூலம் இழப்பீடு கோரியுள்ளது.
 
வெளிநாட்டு அரசுகளுக்கு அமெரிக்க அரசு சட்டப் பாதுகாப்பு வழங்குவதால் இந்த வழக்கு மிசௌரி மாகாணத்துக்கு ஆதரவாக அமைவது கடினம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று காரணமாக அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.
 
கொரோனா பரவலைத் தடுக்க அமலாகியுள்ள ஊரடங்கால் தங்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாகவும், அதை தளர்த்த வேண்டும் என்றும் பல அமெரிக்க மாகாணங்கள் வலியுறுத்தி வருகின்றன.