1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (23:16 IST)

ஆப்கானிஸ்தான்: அல்-காய்தாவையும் தாலிபனையும் இணைக்கும் உறுதி மொழி

ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன் கைப்பற்றியதில் ஒரு முக்கிய கேள்வி எழுந்துள்ளது. தங்களது நீண்ட கால நட்பு இயக்கமான அல்-காய்தாவுடனான தாலிபன்களின் உறவு எப்படி இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி.
 
தாலிபனுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான உறவு, "பேயா" என்ற ஒரு விசுவாச உறுதிமொழியால் பிணைக்கப்பட்டுள்ளது. 1990களில் ஒசாமா பின் லேடன் தாலிபன் தலைவர் முல்லா உமருக்கு அளித்த உறுதிமொழி இது.
 
இது பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தாலிபன்கள் இதை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை.
 
அமெரிக்காவுடனான 2020 அமைதி ஒப்பந்தததுக்குப் பிறகு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்காது என்று தாலிபன் ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 15ம் தேதி காபூலைக் கைப்பற்றிய பிறகு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் ஒரு முறை அறிவித்தார்கள். ஆனால் தாலிபன் இயக்கத்தினர் அல்-காய்தாவை வெளிப்படையாக நிராகரித்ததாகவும் தெரியவில்லை.
 
அதேசமயம் அமெரிக்காவைப் பற்றிய தன் எண்ணத்தையும் அல்-காய்தா மாற்றிக்கொள்ளவில்லை.
 
அல்கெய்தா ஊடகம் தொடர்ந்து அமெரிக்காவை அச்சுறுத்தி வருகிறது
 
விசுவாச உறுதிமொழியின் முக்கியத்துவம்
 
`பேயா` என்ற அரபிய சொல்லுக்கு ஒரு இஸ்லாமியத் தலைவர் மீதான விசுவாசத்திற்கான உறுதிமொழி என்பது பொருள். ஜிஹாதிய அமைப்புகள் பலவற்றுக்கும் அவர்களின் நட்பு அமைப்புகளுக்குமிடையே உள்ள பக்திக்கு இதுதான் அடிப்படை.
 
ஆப்கானிஸ்தானில் தாலிபனின் இடைக்கால அமைச்சரவை - யாருக்கு என்ன பொறுப்பு?
ஆப்கானிஸ்தானில் தாலிபனின் எழுச்சி பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
 
இருதரப்பினரும் கடைபிடிக்கவேண்டியவற்றை பேயா குறிப்பிடுகிறது. பேயாவை அளிக்கும் ஒருவர், தலைவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும், இதை மீறுவது இஸ்லாத்தில் ஒரு கடுங்குற்றமாகக் கருதப்படுகிறது.
 
அல்-காய்தாவைப் பொறுத்தவரை, தாலிபன்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை பேயா உறுதிசெய்கிறது. தாலிபன் தலைவர் மற்றும் அவருக்குப் பின் வருபவர்களுக்கு "நம்பிக்கையாளர்களின் தலைவர்" என்ற பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது.
 
9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒஸாமா பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முல்லா உமர் மறுத்ததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் 2001ல் அமெரிக்கா படையெடுத்தது.
 
அல்-காய்தாவின் இராக்கிய நட்பு அமைப்பு ஒன்று தன் பேயா விதியை மீறிமத்திய உத்தரவுக்குக் கட்டுப்படாமல் இருந்ததால் அது உடைந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் இயக்கமான ஐ.எஸ் ஆக மாறியது.
 
இன்றும் அல்-கெய்தாவும் ஐ.எஸ் அமைப்பும் எதிரிகளாக இருக்கிறார்கள்.
 
ஐ.எஸ் இயக்கத்தின் ஆப்கானிஸ்தானிய கிளை ஐஎஸ்.கே - இஸ்லாமிக் ஸ்டேட் கொராசான் மாகாணம் என்று அழைக்கப்படுகிறது.
 
தாலிபனுக்கு அல்-காய்தாவைத் தவிர பல ஜிஹாதிய அமைப்புகள் பேயா அளித்துள்ளன.
 
பாகிஸ்தானிய தாலிபனும் பேயா அளித்துள்ளது. தாலிபன்கள் ஆஃப்கானிஸ்தானை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தபோது அது புதுப்பிக்கப்பட்டது.
 
ஒசாமா
 
இறந்தவருக்கு செய்து தரப்பட்ட சத்தியப் பிரமாணம்
2011ல் பின்லேடனின் இறப்புக்குப் பிறகுஅல்-காய்தா தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி, அல்-காய்தா மற்றும் அதன் பிராந்திய அமைப்புகள் சார்பில் ஒரு பேயா அளித்தார்.
 
இராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் தன் ஆட்சியை அறிவித்தபிறகு இது 2014ல் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் 2015 ஜூலை மாதம், இரண்டு ஆண்டுகள் முன்பே முல்லா உமர் இறந்துவிட்டதாக தாலிபன் அறிவித்தது. இறந்த ஒருவருக்கு விசுவாசத்தை அறிவித்தவகையில் அல்-ஜவாஹிரிக்கு அது கொஞ்சம் வெட்கம் தரக்கூடிய செயலானது.
 
2015 ஆகஸ்ட் 13ம் தேதி, புதிய தலைவரான முல்லா அக்தர் மொஹமத் மன்சூருக்குத் தனது பிரமாணத்தைப் புதுப்பித்தார் அல்-ஜவாஹிரி. "வேற்று மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்லாமிய தேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுப்பதற்காக ஜிஹாத் நடத்தப்படும்" என்று உறுதிமொழி எடுத்தார்.
 
"சர்வதேச ஜிஹாதி அமைப்பிலிருந்து இந்த உறுதிமொழியை அங்கீகரிக்கிறோம்" என்று மன்சூர் அறிவித்தார். அது அல்கொய்தாவின் சர்வதேச ஜிஹாதி எண்ணங்களையும் அங்கீகரிப்பதாகவே பார்க்கப்பட்டது.
 
தாலிபனின் சொந்த விதிமுறைகளே இதற்கு முரணாக இருக்கின்றன. ஆஃப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதும் அண்டை நாடுகளுடன் சாதாரணமான உறவைப் பேணுவதுமே அதன் நோக்கங்களாகும்.
 
மே 2016ல் அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் மன்சூர் கொல்லப்பட்ட பிறகு ஹிபாதுல்லா அஹுன்சாதா தலைமைப் பொறுப்பை ஏற்றபிறகு, அல்-ஜவாஹிரியின் இந்த உறுதிமொழியைத் தாலிபன்கள் அங்கீகரிக்கவில்லை.
 
அதை மறுதலிக்கவும் இல்லை.
 
இந்த உறுதிமொழியின் தற்போதைய குழப்பமான சூழல், இரண்டு அமைப்புகளுக்குமிடையே உள்ள நிலையற்ற தன்மையின் மையப்புள்ளியாக இருக்கிறது.
 
அடுத்தது என்ன?
 
மீண்டும் பதவிக்கு வந்ததால், தாலிபன்கள் இரு திசைகளில் இழுக்கப்படுகிறார்கள்.
 
அல்-காய்தாவுடனான நட்பு, தீவிர ஜிஹாதிய வட்டாரங்களில் தாலிபனுக்கு ஒரு நம்பகத்தன்மையைத் தந்திருக்கிறது. முன்பே அல்-காய்தாவுடன் ஒரு விசுவாசம் இருப்பதால், அதிகாரத்துக்கு வந்த பிறகு தங்கள் நட்பை முறித்துக்கொள்ளவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
 
ஆனால் அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்துக்கும் கட்டுப்படவேண்டிய நிலையில் உள்ள தாலிபன்கள், அமைதி வழி மேலாண்மையையும் கையிலெடுத்திருக்கிறார்கள்.
 
தாலிபன்களின் "வெற்றிக்கு" வாழ்த்து சொல்லியிருக்கும் அல்-காய்தா மற்றும் நட்பு அமைப்புகள், அஹுன்சாதாவை "நம்பிக்கையாளர்களின் தலைவர்" என்று மீண்டும் அறிவித்திருக்கிறது.
 
இந்த செய்திகளைத் தாலிபன்கள் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் பாலத்தீனிய இஸ்லாமிய அமைப்புகளான ஹமாஸ் போன்றவற்றிலிருந்து வந்த வாழ்த்துச்செய்திகளை அது ஏற்றுக்கொண்டிருக்கிறது.
 
பின் லேடனின் நெருங்கிய கூட்டாளியான அமீன்-அல்-ஹக் தற்போது ஆஃப்கானிஸ்தான் வந்திருக்கிறார். இது இந்த இரு அமைப்புகளிடையே உள்ள தொடர்புகள் இன்னும் இருக்கின்றன என்பதையே தெரிவிக்கிறது. தாலிபனின் அங்கமான ஹக்கானி கூட்டமைப்புடனும் அல்கெய்தா வலுவான பிணைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
 
தாலிபன்களுக்கு இருக்கிற குழப்ப நிலையை இது பிரதிபலிக்கிறது. ஒருபுறம் சர்வதேச அரங்கில் அங்கீகாரம் பெற்று அதனால் வரும் நன்மைகளைப் பெற விரும்பும் தாலிபன்கள், அதற்காக தீவிரவாதத்தையும் மறுதலிக்கவேண்டும்.
 
20 ஆண்டுகளாக நட்புடன் இயங்கும் அல்-காய்தாவையும் அவர்களால் கைவிட முடியாது. அப்படி செய்தால் தங்கள் வெற்றியைத் தீவிரமாகக் கொண்டாடிய பல தீவிரவாத அமைப்புகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கவேண்டியிருக்கும்.