ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (15:06 IST)

இரான் சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானத்தின் கருப்பு பெட்டி பதிவு செய்த 19 நொடிகள் மற்றும் பிற செய்திகள்

இரான் வீழ்த்திய விமானத்தின் கருப்பு பெட்டி பதிவு செய்த 19 நொடிகள்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தின் கருப்புப்பெட்டி பதிவுசெய்த காக்பிட் உரையாடல்கள் 19 நொடிகள் நீடித்ததாக இரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானம் ஜனவரி 8ஆம் தேதி டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனீ சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே விபத்துக்கு உள்ளானது.

விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பெரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது.

முதலில் தாங்கள் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த வில்லை என்று மறுத்து வந்தான் இரான், பின்பு தங்கள் நாட்டு புரட்சிகர இராணுவத்தினர் தவறுதலாக இதை சுட்டு வீழ்த்தி விட்டனர் என்று தெரிவித்தது.

ஞாயிறன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, "முதல் ஏவுகணை விமானத்தை தாக்கிய பின்னும் 19 நொடிகள் வரை இரண்டு விமானிகள் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஆகியோரிடையே உரையாடல் நடந்தது," என்று இரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் கேப்டன் சங்கானே தெரிவித்துள்ளார்.

"அதற்கு 25 நொடிகள் கழித்து இரண்டாவது ஏவுகணை விமானத்தைத் தாக்கியது; அவர்கள் கடைசி நொடி வரை விமானத்தை இயக்கி வந்துள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.

19 நொடிகள் கழித்து இந்தப்பதிவு நின்றுவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்

அந்த சமயத்தில் பயணிகள் பகுதியிலிருந்து எந்த ஒலியும் பதிவாகவில்லை.

காக்பிட்டில் நடந்த உரையாடல் குறித்த விவரங்களை சங்கானே தெரிவிக்கவில்லை.

விமானத்தின் கருப்புப் பெட்டியை வெளியிட மறுத்து வந்த இரான், ஜூலை மாதம் அதை சோதனை செய்வதற்காக பிரான்ஸ் அனுப்பி வைத்தது.

ஜெனெரல் காசெம் சுலேமானீ கொலைக்கு பின்பு

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.

இதை மறுத்து வந்த இரான், பின்னர் இரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, 'மனித தவறுகளின்' காரணமாக அதை சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்தது.
 

டிக் டாக் காணொளி செயலி அமெரிக்கா அரசை எதிர்த்து நீதிமன்றம் செல்வது ஏன்?

தங்கள் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக டிக்டாக் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்துடன் வரும் செப்டம்பர் மாத மத்தி முதல் பரிமாற்றங்கள் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அமெரிக்கப் பயனாளிகளின் தகவல்களை சீன அரசுக்கு பைட்டான்ஸ் நிறுவனம் வழங்கி விடும் என்ற கவலை தங்களுக்கு உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.