வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ப‌ரிகார‌ங்க‌ள்
Written By Webdunia

சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் சனி பகவான் ஆசி பெற என்ன செய்யலாம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிம்மத்தில் இருந்த சனி பகவான் வரும் 26ஆம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் சிம்மத்திற்கு ஜென்ம ராசியில் இருந்த சனி, தற்போது பாதச் சனியாக மாற உள்ளது.

அதேபோல் இதுவரை கன்னி ராசிக்கு ஏழரைச் சனியாக இருந்த சனி பகவான், இனி அவர்களுக்கு ஜென்ம சனியாக மாறுகிறார். அதேபோல் துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் 26ஆம் தேதி முதல் ஏழரைச் சனி துவங்குகிறது.

எனவே, சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியைப் பெற என்ன பரிகாரங்கள், பிரார்த்தனைகள் செய்ய வேண்டும்?

பதில்: சிம்ம ராசிக்காரர்களுக்கு பாதச்சனி நடப்பதால், வில்வ இலை கொண்டு சிவன், நந்தியை பூஜிக்கலாம். திருவண்ணாமலை, திருத்தணி, பழநி கோயில்களில் கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்ல முடியாதவர்கள் கோயில் பிரகாரத்தை 3 முறை பிரதட்சணம் செய்வது நல்லது. இதன் மூலம் பாதச்சனியின் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம். அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்வதும் பலனளிக்கும்.

சிம்ம ராசிக்கு வரும் 26ஆம் தேதி முதல் பாதச்சனி கால கட்டம் துவங்குவதால், வறுமையில் வாடுபவர்களுக்கு காலணி வாங்கித் தருவது நல்ல பரிகாரமாகும். கால் இல்லாதவர்களுக்கு உதவலாம். கால் அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாத ஏழைகளுக்கு நிதியுதவி செய்யலாம். வீடு, அலுவலகப் பணியாளர்களின் நியாயமான தேவைகளை குறையின்றி பூர்த்தி செய்யலாம்.

கன்னி ராசிக்காரர்களுக்கு வரும் 26ஆம் தேதி முதல் ஜென்ம சனி துவங்குவதால், உடல்நிலை பாதிக்கும். வயிற்றுக் கோளாறு, ஜீரண பிரச்சனை, வயிறு எரிச்சல், தூக்கமின்மை ஏற்படும். எனவே, அசைவ உணவுகள், எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.

குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பவர்கள் எப்படியாவது அதனை நிறுத்தி விடுவது சாலச் சிறந்தது. இல்லாவிட்டால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல நேரிடும்.

சந்திரனுடன் சனி அமரும் காலமே ஜென்ம சனி என ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களின் மனநிலை/அமைதி சற்று பாதிக்கப்படும். பிரச்சனைகள் வருவதற்கு முன்பாகவே அதுபற்றிய பயமும், அவமானம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற பீதியும் அவர்களை வாட்டும். மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாத மனநிலை ஏற்படும். எனினும், தம்மைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார், தீயவர்கள் யார் என்பதை சனி உணர வைப்பார். நீங்கள் மலை போல் நம்பிய ஒருவர், சாதாரணமானவர்கள் என்றும் சனி தெரிய வைப்பார்.

தன் பலம் எது, பலவீனம் எது என்பதையும் சனி உணர்த்துவார். உதாரணமாக, இதுவரை அறிவாளி எனக் தாங்களாகவே கருதிய சிலருக்கு, இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவோ உள்ளது என்பதை சனி அறிவுறுத்துவார்.

எளிய உணவுகள், எளிய ஆடை அணிதல், நடைப்பயணம், பாதயாத்திரை மேற்கொள்ளுதல் ஜென்ம சனிக்கு பரிகாரமாக அமையும். ஜென்ம சனியில் இருந்து விடுபட கன்னி ராசிக்காரர்கள் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

வெற்றிலை மாலை, வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவதும் நல்ல பலன்தரும். இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, பொருள் உதவி, ஆறுதல் வார்த்தைகள் சொல்லலாம். அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுவதும் மூலமும் ஜென்ம சனியின் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் 26ஆம் தேதி முதல் ஏழரைச் சனி துவங்குகிறது. எனினும் அவர்கள் பயப்படத் தேவையில்லை. துலாம் ராசிக்கு ஏழரைச் சனி அவ்வளவாக கெடுதல் செய்யாது.

எனினும் விரய வீட்டிற்கு (12வது வீடு) சனி வந்துள்ளதால் பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படும். துலாம் ராசிக்கு 4, 5வது இடத்திற்கு உரியவராக சனி பகவான் வருகிறார். ஜோதிடத்தில் 4ஆம் இடம் தாயையும், 5ஆம் இடம் குழந்தைகளையும் குறிக்கும். எனவே குழந்தைகளால் பிரச்சனைகள், தாய் உடல்நலத்தில் கோளாறு, அறுவை சிகிச்சை உள்ளிட்டவை ஏற்படும். சில நேரங்களில் பிள்ளைகளின் திருமணம் தள்ளிப்போவதும் நிகழும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆடம்பர வாழ்க்கையைக் வாரிக் கொடுப்பார். ஆனால் அவர்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் கிட்டும். ஆனாலும் துலாம் ராசிக்காரர்கள் எளிமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

வாக்குவாதம் முற்றும் போது உறவினர்கள், நண்பர்கள் மனம் புண்படாதபடி பேசுவதில் துலாம் ராசிக்காரர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஈகோ பிரச்சனை வரும். அந்த வகையில் கவனமாக இருக்க வேண்டும்.

ஏழரைச் சனியின் பாதிப்பை குறைத்துக் கொள்ள துலாம் ராசிக்காரர்கள் பெருமாள் வழிபாட்டை, குறிப்பாக சயன நிலையில் உள்ள பெருமாளை வணங்கலாம். ஸ்ரீரங்கநாதர் மட்டுமின்றி வெங்கடாஜபதியையும் சேவிக்கலாம்.