வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (13:36 IST)

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைக்கு நட்பு நாடுகளின் ஆதரவு தேவை - ஒபாமா

ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை அமல்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் ஆதரவு தேவை என்று தெரிவித்துள்ளார்.
 
டோக்கியோவில் உள்ள அகாசகா விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை, ஒபாமா சந்தித்துப் பேசினார். அப்போது அவர், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை தயார் நிலையில் உள்ளது என்றும், அதை அமல்படுத்துவதற்கு நட்புநாடுகளின் ஆதரவு தேவை என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை என்று ஒபாமா கூறினார்.
 
உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவான பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், ஒபாமா இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேகுலும், கிழக்குச்சீன கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுக்கூட்டங்கள் தொடர்பாக சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையே நிலவும் சிக்கல் குறித்து ஒபாமா தனது நிலைபாட்டை தெரிவித்தார். அந்த தீவுக் கூட்டங்கள், வரலாற்று ரீதியாக ஜப்பான் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன என்றும் இப்பிரச்னை தொடர்பாக ஜப்பானுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தல் எழும்போது, அந்நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பானுக்கு ஆதரவாகவே அமெரிக்கா செயல்படும் என்று ஒபாமா கூறினார்.