வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2014 (19:12 IST)

காணாமல் போன விமானத்தை கண்டறிய புதிய கருவி

காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டறிய 750 கிலோ எடை கொண்ட புதிய கருவியை பயன்படுத்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த மாதம் 8 ஆம் தேதி காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைப் பற்றிய தேடலில் இதுவரை எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
 
கிளம்பிய ஒரு மணி நேரத்தில் ரேடாரிலிருந்து மாயமாக மறைந்த விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் ஆஸ்திரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு உலக நாடுகள் பலவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. 30 நாட்களுக்கு மட்டுமே செயல்படும் கறுப்புப் பெட்டியின் பேட்டரி இன்றுடன் 38 நாட்கள் ஆன நிலையில் செயலிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.
 
அதற்கேற்ப ஆழ்கடலில் இருந்து கிடைத்த சிக்னல்கள் நின்று ஆறு நாட்களாவதாக இந்தத் தேடுதல் வேட்டைக்குத் தலைமை தாங்கும் அங்குஸ் ஹூஸ்டன் குறிப்பிட்டார். ஆனால் முன்பு சிக்னல்கள் கிடைத்த இடத்தில் தற்போது எண்ணெய் திரட்டு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமிக்ஞை ஒலி கேட்ட ஆழ்பகுதியிலிருந்து கடல் மட்டத்தில் திரள இதற்கு பல நாட்கள் பிடித்திருக்கக்கூடும்.
 
இந்தக் கசிவு எந்த தேடுதல் கப்பலிலிருந்தும் வெளியேறியிருக்க வாய்ப்பில்லை என்று கருதும் ஹூஸ்டன் கிட்டத்தட்ட இரண்டு லிட்டர் கசிவு சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்படவுள்ளது என்றார். இதனால் விரைவில் ஆழ்கடலில் தேடும் பணி துவங்கப்படும் என்று கூறினார். அமெரிக்கத் தயாரிப்பான புளூபின்௨1 என்ற 4.93 மீ நீளமுடைய சோனார் கருவி ஒன்று இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று ஹூஸ்டன் தெரிவித்தார்.
 
750 கிலோ எடை கொண்ட இந்தக் கருவி கடலின் அடியில் 4,500 மீ ஆழம் வரை செல்லக்கூடியது. கறுப்புப் பெட்டி ஒலி கண்டறியப்பட்ட தூரமும் இதனை ஒத்துள்ளதால் இந்த முயற்சியின் மூலம் காணாமற்போன விமானத்தைப் பற்றி ஏதேனும் தெரியவரலாம் என்று கருதப்படுகின்றது.