வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 17 ஏப்ரல் 2014 (20:21 IST)

ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள்: 4 ஆம் இடத்தில் இலங்கை

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தண்டனை வழங்காத நாடுகளின் பட்டியலில், இலங்கை நான்காம் இடத்தில் உள்ளதாக ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.
 
ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (சிபிஜே) அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இலங்கையில் ராணுவம் தொடர்பான செய்தியை வெளியிட்டதற்காக கொல்லப்பட்ட அய்யாத்துரை நடேசன் மற்றும் செய்தியாளர் வசந்த விக்கிரமதுங்க உட்பட 9 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில், இதற்குக் காரணமான ஒருவரைக்கூட தண்டிக்காத இலங்கை, இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
 
இது குறித்து ஊடகவியலாளர் பாதுகாப்பு குழு (சிபிஜே),  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே போர் முடிவுக்கு வந்த போதும், இலங்கை அதிபர் மகிந்தர ராஜபக்ச, செய்தியாளர்களின் கொலைகளுக்குத் தண்டனை பெற்றுதர விரும்பபில்லை என்றும், பல செய்தியாளர்களின் கொலைகளுக்குப் பின்புலத்தில் இலங்கை அரசும், மற்றும் ராணுவ அதிகாரிகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
 
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், ஈராக் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் கொல்லப்பட்ட போதும், அதில் சம்பந்தபட்ட குற்றவாளிகளை தண்டிக்காத நாடாக ஈராக் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதேபோல் சோமாலியா இரண்டவது இடத்திலும், பிலிப்பைன்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
 
செய்தியாளர்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 13 நாடுகள் பட்டியலில் சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, நைஜீரியா, ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் 13 ஆவது இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.