வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2015 (10:57 IST)

ஏமனில் உள்நாட்டுப் போர்: இந்தியர்களை மீட்க கப்பல்களை அனுப்புகிறது மத்திய அரசு

ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு கப்பல்களை அனுப்புகிறது.
 
ஏமன் நாட்டின் தலைநகரான சனா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதால் அந்நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
 
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ஹவுதி என அழைக்கப்படுகிற ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அங்கு அரசு படையை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
 
கிளர்ச்சியாளர்கள் ஏடன் நகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக போராடி வருகிறனர். அவர்கள் அங்குள்ள விமான தளம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். 
 
இதனால் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதி தலைநகர் சனாவிலிருந்து ஏடன் நகருக்கு இடம்பெயர்ந்தார். கிளர்ச்சியாளர்களை ஒடுக்க உதவுமாறும் சவுதி அரேபியாவிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
இதற்கிடையே கிளர்ச்சியாளர்கள் ஏடனை நகரையும் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அதிபர் ஹாதி ஏமனை விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹாதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா வான் வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. 
 
கிளச்சியாளர்களை ஒடுக்கும் வகையில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்களையும் ஏமனுக்கு அனுப்ப சவுதி தயாராகி வருகிறது. தொடர்ந்து ஏமனில் நெருக்கடி நிலவுவதால், அங்கு பணியாற்றி வரும் இந்தியர்களை மீட்க கப்பல்களை அனுப்ப உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
ஏமன் நாட்டில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில் 3,500 இந்தியர்கள் வசித்து வருவதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தலைநகர் சனாவில் மட்டும் 2,500 இந்தியர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
அதில் பெரும்பாலானோர் செவிலியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டை விட்டு புறப்படத் தேவையான சிறப்பு உதவிகளை சனாவில் உள்ள இந்திய தூதரகம் அளிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
 
இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை 00-967-734 000 658 மற்றும் 00-967-734 000 657 என்ற அவரச தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.