1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2015 (08:47 IST)

ஏமனில் உள்நாட்டுப் போர்: 40 தமிழர்கள் உட்பட 350 பேர் நாடுதிரும்பினர்

உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 40 தமிழர்கள் உள்பட 350 பேர் மீட்கப்பட்டடு, விமானப்படை விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.


 

 
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், அந் நாட்டின் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். அதனால், சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதி, தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார். முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவு படைகளும் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்துள்ளன.
 
இந்நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை விரட்டி விட்டு, அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதியின் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை கொண்டு வருவதற்காக, சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதலைத் தொடங்கின.
 
இதைத் தொடர்ந்து, சவுதி அரேபிய கூட்டுப்படைகள், விமானங்கள் மூலம் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்களின் ஆயுதம் மற்றும் ஏவுகணை கிடங்குகளை தகர்த்தன. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தையும் குண்டு வீசி தகர்த்தன.
 
ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து இன்னும் முழுமையாக மீட்க முடியவில்லை. இதனால், உள்நாட்டு போர் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக, ஏமன் நாட்டில் பணியாற்றி வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், போர்ச் சூழலில் சிக்கித்தவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள், ஏமனில் வசிக்கு தங்கள் நாட்டு மக்களை மீட்டு அழைத்து வர விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி வைத்துள்ளன.
 
ஏமன் நாட்டில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வநதனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் செவிலியர்கள் ஆவர். அவர்கள் வசித்து வந்த, தலைநகர் சனா, ஏடன் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.
 
எனவே, இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர இந்தியா திட்டமிடது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரஹத்’ என்று பெயரிடப்பட்டது. ‘ரஹத்’ என்றால், ‘நிவாரணம்’ என்று பொருள். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த திங்கட்கிழமை, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்துடன் தொலைபேசியில் பேசினார்.
 
அப்போது, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக சவுதி மன்னரும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ்.சுமித்ரா’ கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைக்காக ஏற்கனவே ஏமன் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
 
அந்த கப்பல், மீட்புப்பணிக்காக ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை, ஏடன் துறைமுகம் அருகே சென்ற ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பல், உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக பல மணி நேரம் காத்திருந்த பிறகு நேற்று முன்தினம் துறைமுகத்துக்குள் நுழைந்தது.
 
அந்த துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட 40 தமிழர்கள் உள்ளிட்ட 350 இந்தியர்கள், ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பலில் ஏற்றப்பட்டனர். அவர்களில் 101 பெண்களும், 28 குழந்தைகளும் அடங்குவர்.
 
மீட்கப்பட்ட 350 இந்தியர்களும், சுமித்ரா கப்பல் மூலம் ஏடன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டனர். 9 மணி நேர பயணத்துக்குப் பிறகு, நேற்று அவர்கள் அண்டை நாடான ஜிபோட்டிக்கு வந்து சேர்ந்தனர்.
 
மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய அமைச்சர் வி.கே.சிங், கப்பலில் வந்து சேர்ந்த 350 இந்தியர்களையும் வரவேற்றார். அவர்களில் 206 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 40 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 31 பேர் மராட்டிய மாநிலத்தையும், 23 பேர் மேற்கு வங்காளத்தையும், 22 பேர் டெல்லியையும், 15 பேர் கர்நாடகாவையும், 13 பேர் ஆந்திராவையும் சேர்ந்தவர்கள்.
 
கடல் மார்க்கமாக வந்து சேர்ந்த 350 இந்தியர்களையும் ஆகாய மார்க்கமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக, இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி–17 குளோப்மாஸ்டர்ஸ் ரக விமானங்கள், ஜிபோட்டி நாட்டில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
 
கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டு, கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த விமானம் நேற்று இரவு கொச்சி வந்து சேர்ந்தது.
 
மற்ற அனைவரும், மற்றொரு விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் இரவில் மும்பை வந்து சேர்ந்தனர். இதுபோல், ஏமனில் சிக்கித் தவிக்கும் பிற இந்தியர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்காக, மும்பை, தர்காஷ் ஆகிய இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள், மும்பையில் இருந்து ஜிபோட்டிக்கு விரைந்துள்ளன. 
 
இந்தக் கப்பல்கள் நாளை அங்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல், கவரட்டி, கோரல்ஸ் ஆகிய இரண்டு பயணிகள் கப்பல்கள், கொச்சியில் இருந்து ஜிபோட்டிக்கு விரைந்துள்ளன. இதுதவிர, ஐ.என்.எஸ்.சுமித்ரா கப்பலும் தொடர்ந்து மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.
 
மேலும், இரண்டு இந்திய விமானங்களும் ஏமன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தலா 180 பேர் பயணம் செய்ய முடியும். அவை அண்டை நாடான ஓமனில் உள்ள மஸ்கட்டில் முகாமிட்டுள்ளன. ஏமன் தலைநகர் சனாவுக்கு செல்ல ஒப்புதல் கிடைப்பதற்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.