வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 20 செப்டம்பர் 2014 (08:22 IST)

மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்தது நியூயார்க் நகர நிர்வாகம்

தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக, இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் கொடுத்தது நியூயார்க் நகர நிர்வாகம்.

இந்தியாவைச் சேர்ந்த கிருத்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து ஒரு நாள் முழுவதும் காவலில் வைத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த கிருத்திகா தன்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நஷ்டஈடாக 1.5 மில்லியன் டாலர்கள் கோரியிருந்தார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைகள் முடிவடைந்து தற்போது தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் கோயெல்டல் கிருத்திகாவிற்கு நஷ்ட ஈடாக 2,25,000 டாலர் தொகையினை (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 750 ரூபாய்)நியூயார்க் நகர நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நேரத்தில் கிருத்திகா மதிப்பு மிக்க மாணவியாக இருந்துள்ளார் என்றும் அவர்மீது தவறான குற்றம் சுமத்தப்பட்டது என்பதையும் நீதிபதி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் கிருத்திகா இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமான தனது அனைத்து புகார்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதாக அறிவித்துள்ளார்.

தனக்கு இந்த வழக்கில் உதவி புரிந்த இந்திய அமெரிக்க சமூகம், முன்னாள் இந்தியத் தூதுவர்கள் பிரபு தயாள், மீரா ஷங்கர் மற்றும் தன்னுடன் துணை நின்ற தனது பள்ளித் தோழிகள், வகுப்பு ஆசிரியர்கள் என்று அனைவருக்கும் தனது நன்றியையும் அவர்  வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.