வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (15:05 IST)

அடுத்து என்ன செய்ய வேண்டும்? - தலைமையின் உத்தரவிற்கு காத்திருந்த தாலிபான் தீவிரவாதிகள்

நாங்கள் அனைத்து குழந்தைகளையும் கொன்றுவிட்டோம், அடுத்து நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று தங்களது தலையிடம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடையில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் தலைமையாசிரியர் மற்றும் 132 மாணவ, மாணவியர் உள்பட 148 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
 
இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர். தாக்குதல் நடத்துவதற்கு முன் 6 பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தாலிபான் இயக்கம் வெளியிட்டுள்ளது.
 
இதற்கிடையில், பாகிஸ்தான் இணையதளம் ஒன்று, ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தலைமையின் உத்தரவைப் பெற்றுத்தான் தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், பெஷாவர் தாக்குதலின் பின்னணியில் தாலிபான் தளபதி உமர் நரே மூளையாக இருந்து செயல்பட்டதாகவும் தகவல் வெளியிட்டிருந்தது.
 
இது தொடர்பாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப், அவசர பயணமாக ஆப்கானிஸ்தான் சென்ற தாலிபான் தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து அந்த  நாட்டு ராணுவத்துடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
 
இந்நிலையில் தாக்குதல் நடத்தியபோது, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்ட தீவிரவாதிகளுக்கும் இடையிலான தகவல்தொடர்பு உரையாடல் வெளியாகியுள்ளது.
 
"நாங்கள் ஆடிடோரியத்தில் இருந்த அனைத்து குழந்தைகளையும் கொன்றுவிட்டோம், அடுத்து நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?" என்று தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனது தலைவனிடம் கேட்டுள்ளான்.
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தீவிரவாத இயக்க தலைவன், "ராணுவத்தின் வருகைக்காக காத்திருங்கள், அவர்களையும் கொன்றுவிட்டு, உங்களை தகர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளான் என்று தெரியவந்துள்ளது.
 
இத்தகவலை விவரித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு துறை மூத்த அதிகாரி, தலிபான் இயக்கத்தின் தகவல் வளையத்தை பாகிஸ்தான் உளவுத்துறை இடைமறித்து கேட்டபோது தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.