வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 19 ஏப்ரல் 2014 (13:22 IST)

தெற்கு சூடான் பாதுகாப்பு முகாம் தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்

தெற்கு சூடான் பாதுகாப்பு முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு தாக்குதலுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே சில மாதங்களாக நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500 க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால், தஞ்சம் தேடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். 
 
ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு முகாம்களை அமைத்து அவர்களைத் தங்க வைத்துள்ளனர். இதுபோல் போர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 5000 திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
 
இங்கு கடந்த 17 ஆம் தேதி அதிகாரிகளிடம் மனு அளிப்பதாகக் கூறி உள்ளேவந்த சிலர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் ஐ.நா அமைதிப்படையினர் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்பு கவுன்சில் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
 
இந்தத் தாக்குதல் ஒரு போர்க்குற்றமாகவும் கருதப்படும் என்பதையும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தெற்கு சூடான் அரசு உடனடியாக பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு முகாம்களின் பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும், இத்தகைய குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.