வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 20 ஜூலை 2014 (14:37 IST)

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: மலேசிய பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம்

உக்ரைனில் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஆதரிப்பதாக மலேசிய பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மலேசியப் பிரதமர் முகமது நஜீப் ரசாக்கிற்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:-

“மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நியாயமானது. எந்தச் சூழ்நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தியா ஆதரிக்கிறது.

சில மாதங்களுக்கு முன் மலேசிய விமானம் ஒன்று காணாமல் போன துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அது என்ன ஆனது என்பது இதுவரை தெரியாமல் அந்த விவகாரத்துக்கு முடிவே இல்லாமல் போய்விட்டது“ என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய விமானம் எம்ஹெச்17 உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்யாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.