1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2016 (16:13 IST)

மறுவாக்கு எண்ணிக்கை: டிரம்ப் கடும் எதிர்ப்பு, மோசடி என குற்றச்சாட்டு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். 


 
 
அமெரிக்க தேர்தல் முறைப்படி அதிபரின் வெற்றியை தேர்வாளர் வாக்குகள் தான் நிர்ணயிக்கும். அந்த வகையில் ஹிலாரியை விட டிரம்ப் கூடுதல் தேர்வாளர்களை பெற்று வெற்றி பெற்றார்.
 
தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்பெயின் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் மனு செய்துள்ளார்.
 
அதே போன்று மிக்சிகான், பென்சில்வேனியாவிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதற்கிடையே கிரீன் கட்சி வேட்பாளரின் கோரிக்கையை ஹிலாரி கிளிண்டன் தரப்பும் ஆதரித்துள்ளது. 
 
தற்போது அதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிரீன் கட்சி வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்தது தேவையற்றது. இது மோசடியாகும் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ஒட்டுமொத்தமாக ஒரு சதவீத ஓட்டுக்கும் குறைவாகத்தான் கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் பெற்றுள்ளார். அவர் மறுவாக்கு எண்ணிக்கை என்ற பெயரில் தனது கஜானாவை பணத்தால் நிரப்பிக்கொள்வதற்குத்தான் நிதி திரட்டி உள்ளார். இது ஊழல் ஆகும். தேர்தலில் மக்கள் பதில் அளித்து விட்டார்கள். 
 
எனவே தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும். அதை எதிர்ப்பதோ, தவறாக பயன்படுத்துவதோ கூடாது என கூறி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார் டிரம்ப்.