வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (15:34 IST)

4 மணி நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் செல்லலாம்: தயாராகிறது அதி நவீன விமானம்

உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்லும் வகையில், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய நவீன ரக விமானத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்து வருகிறது.
 
இந்த விமானம், தரையிலிருந்து புறப்படும் போது விமானத்தின் வேகத்தில் செல்லும். ஆனால், புவி ஈர்ப்பு விசைக்கும் அதிகமான உயரத்தில் பறக்கும்போது, ராக்கெட் வேகத்தில் சீறிப்பாயும்.
 
இந்த விமானத்தைத் தயாரிக்கும் இரண்டாம் கட்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. இது ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
 
அதிவேகத்தில் செல்லக் கூடிய, இந்த ராக்கெட் எஞ்சின்களை இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து, அதற்கான காப்புரிமையும் பெற்றிருந்தது.
 
ஆனால், வர்த்தக ரீதியாக இவ்வகையிலான விமானங்களை இந்நிறுவனம் தயாரிக்கவில்லை. இந்நிலையில், இந்த தொழில் நுட்பத்தை விலைக்கு வாங்கி, ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் நவீன விமானங்களை தயாரிப்பதற்கான பரிசோதனை முயற்சியின் இரண்டாவது கட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
 
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இவ்வகையிலான நவீன விமானங்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் உலகின் எந்த மூலைக்கும் 4 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அதி நவீன வகை ஸாப்ரே தொழில் நுட்பத்துடன் தயாராக உள்ள ஸ்கைலான் விமானங்கள் இன்னும் சில ஆண்டுகளில் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.