வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Thirumalai Somu
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (18:04 IST)

மின்னணு வணிகத்தின் எல்லையற்ற வர்த்தகமும் ஏற்றம் தரும் பொருளாதாரமும்!

பொருளாதாரம் என்ற அச்சாணியில் தான் இந்த உலகத்தின் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. மனித வாழ்வில் இன்று அனைத்துக்கும் அதாரமாக இருக்கும் இந்த பணத்தை மனிதன் பயன் படுத்த தொடங்கும் முன் பண்டம் மாற்று முறையே அமலில் இருந்தது.  மனிதர்கள் தங்களிடம் இருக்கும் பொருளை அடுத்தவரிடம் கொடுத்து அவரிடம் இருந்து தங்களுக்குத் தேவையான பொருளை பெறுவார்கள்.

இதுவே பண்டமாற்று முறை என்று அழைக்கப்பட்டது. இந்த முறையில் பல இடர்பாடுகள் இருந்ததால் வியாபாரம் செய்ய தனியே ஒரு பொருள் தேவையாக இருந்தது. ஆகவே மனிதன் பணம் என்கிற ஒன்றின் தேவையை புரிந்து கொண்டான். ஆரம்பத்தில் உப்பு, சிப்பி போன்ற பொருள்கள் பணமாக பயன்பட்டாலும் பிறகு அது பெரிய அளவில் மற்றம் பெற்றது. பல்வேறு வரலாற்று மாற்றங்களை கடந்து வந்த பணம், சீனர்கள் காகிதப் பணத்தை அறிமுகப்படுத்திய பின் எளிமையாக கையாளக்கூடியதாக மாறியது. 16ம் நூற்றாண்டுகளின் வங்கிகள் தொடங்கப்பட்ட பின் பணம் அடுத்த கட்டத்தை அடைந்தது. இப்படி பல மாற்றங்களை பெற்ற பணத்தை தான் நாம் இப்பொது உட்கார்ந்த இடத்திலிருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கிறோம். 
 
இணையம் கண்டுபிடிக்கப்பட்ட பின் உலகில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மனித வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இணையம் மூலம் கல்வி முதல் கல்யாணம் வரை என்றாகிவிட்டது. இருந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் நாம் செய்து கொள்ளும் அளவுக்கு வளர்ந்த இணைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இணைய வர்த்தகமும் இணைய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஈ-காமர்ஸ் என்று சொல்லப்படும் இணைய வர்த்தகத்தின் விற்பனை 2018 ஆம் ஆண்டில் உலகளவில். 2.6 டிரில்லியனை எட்டியுள்ளது, இது 2017 ஐ விட 8% அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டில் உலகளாவிய பி 2 பி இ-காமர்ஸின் மதிப்பு 21 டிரில்லியன் ஆகும், இது அனைத்து இ-காமர்ஸிலும் 83% ஐ குறிக்கிறது, இது ஆன்லைன் சந்தை தளங்களில் விற்பனை மற்றும் மின்னணு தரவு பரிமாற்ற பரிவர்த்தனைகள் இரண்டையும் உள்ளடக்கியது.,
 
2017 ஆம் ஆண்டில் 28.0 சதவீதம் மற்றும் 2018 இல் 22.9 சதவிதம் வளர்ச்சியடைந்த மின்னணுவணிகம் முந்தைய இரண்டு ஆண்டுகளை விட 2019 சரிவை சந்தித்துள்ளது. ஆனால் உலகமெங்கும் இப்போது மின்னணு வணிகம் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு அடுத்தபடியாக, வட சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள காங்ஜோ நகரில் அமைந்துள்ள கிராமத்தில், 1,120 மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இ-காமர்ஸ் தொடர்பான வேலைகளில் பணியாற்றுகின்றனர்.
 
இந்த கிராமத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மீன்பிடி தண்டுகள் ஒரே நாளில் நாடு முழுவதும் விற்கப்படுகின்றன, ஆண்டு வருவாய் 60 மில்லியன் யுவான் (8.76 மில்லியன் யு.எஸ். டாலர்கள்) தாண்டியுள்ளது. ஈ-காமர்ஸ் வளரும் நாடுகளிலும் கிராமப்புறங்களிலும் செழித்து வளரக்கூடியது மற்றும் திறமையான தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பிற குழுக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சக்தியாக இது இருக்கும் என்று உலக வங்கி மற்றும் அலிபாபா குழுமம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இ-காமர்ஸ் சந்தை தடைகளை சமாளிப்பதோடு மட்டுமின்றி நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரை நேரடியாக இணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது நேரடியாகவும் தளவாட சேவைகள் மற்றும் பரந்த இ-காமர்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பின் பிற பகுதிகளிலும் வேலைகளை உருவாக்க முடியும்,.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு நகர்ப்புறவாசிகள் அனுபவிக்கும் வசதி, வாய்ப்புகளைக் கொண்டு சேர்க்க முடியும் பணத்தின் உருமாற்றத்தை போல் தற்போது வர்த்தகத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றம் உலகலாவிய வணிகத்தை பெருக்குவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் அருமையான வாய்ப்பையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றால் மிகை இல்லை.