1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 29 ஜனவரி 2015 (09:01 IST)

தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம்: அகதிகளை திருப்பி அனுப்ப ஏதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், ராணுவம் தொடர்ந்து நீடித்து வருவதால் அகதிகளை திருப்பி அனுப்ப ஏதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 
இது குறித்து நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 
இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்கு திரும்பிச் செல்வது குறித்து, நாளை (30 ஆம் தேதி) நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பிவைக்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது அகதிகள் விருப்பப்பட்டு இலங்கைக்கு செல்வதானால், அது அவர்களின் விருப்பம் என்பதை பிரதமர் அறிவார்.
 
எனவே, இலங்கை தமிழ் அகதிகளை அந்நாட்டுக்கு செல்ல ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த கூட்டம் கருதப்படும். மேலும், தமிழ் அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போதும் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
 
கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல் இன்று வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் தமிழகத்திற்கு 4 கட்டங்களில் வந்துள்ளனர். அரசு மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரக உதவியுடன் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
 
தற்போதைய நிலையில், மொத்தம் 34 ஆயிரத்து 524 குடும்பங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 55 அகதிகள் தமிழகத்தில் உள்ளனர். இவர்களில், 19 ஆயிரத்து 625 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 924 பேர் 107 அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
 
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழக அரசு, அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு கவுரவமான வாழ்க்கை முறையை உறுதி செய்ததுடன், அதனை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
 
இலங்கை தமிழ் அகதிகள் தங்குவதற்கு, ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு இடவசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தமிழ் அகதிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், சிறப்புமிக்க முடிவை ஜெயலலிதா எடுத்தார்.
 
இதனை தொடர்ந்து, அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கான ரொக்க நிதியுதவி, குடும்ப தலைவருக்கு ரூ.400 ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், பெரியவர்களுக்கு ரூ.288 ல் இலிருந்து ரூ.750 ஆகவும், 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டது.
 
மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் குடும்பத்தினர் பொது விநியோக திட்டத்தின் கீழ், மானிய விலையில், சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
 
இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள், 12 ஆம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி பயில தகுதி அளிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நோட்டுப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டி, மதிய உணவு, பேருந்து பயண அட்டை மடிக்கணினி மற்றும் கணித உபகரணப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்குவதற்கும் தகுதி படைத்தவர்கள் என அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகள் தொழில்நுட்ப கல்லூரிகளிலும், கலை அறிவியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு தகுதி உடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், அரசு தங்கும் விடுதிகளில் சேர்க்கையும் அனுமதிக்கப்பட்டது.
 
அகதிகள் குடும்பத்தினர் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை பெறுவதற்கும் தகுதி பெற்றவர்கள். விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், குடும்ப நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் பெறுவதற்கும் அகதிகளுக்கு தகுதி உள்ளது.
 
மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் பலன்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டப்பலன்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் சுயவுதவி குழுக்களை ஏற்படுத்தும் மகளிர் திட்டம் ஆகிய திட்டங்களின் பயன்களையும் பெற தகுதி படைத்தவர்கள்.
 
இந்த சூழ்நிலையில், அண்மையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், இருதரப்புக்கு இடையே நல்லிணக்கம் உருவாகலாம் என்ற நம்பிக்கை ஏற்பட காரணமாகியுள்ளது. எனினும், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், இலங்கை ராணுவம் தொடர்ந்து நீடித்து வருவது, இன்னும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
 
அச்சம், அடக்குமுறை, மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள் போன்ற சூழ்நிலை முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களிலேயே சிறுபான்மையினராக மாற்றப்படும் சூழ்நிலை இருப்பதாக கவலை ஏற்பட்டுள்ளது.
 
இலங்கையின் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த தமிழர்கள், தொடர்ந்து முகாம்களிலேயே வாழ்கிறார்கள். இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு, அவர்களின் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தலுக்கு ஆக்கப்பூர்வமான உறுதியை அளித்துள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இலங்கையில், மறு குடியமர்வு ஏற்பட்டால்தான், மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப நம்பிக்கையை ஏற்படுத்தும்.
 
இலங்கை தமிழர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அந்நாட்டு அரசு உறுதியான, நம்பத்தகுந்த மறு குடியமர்வு நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, இலங்கை தமிழ் அகதிகள் இடையே, தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பும் நம்பிக்கை உருவாகும். அகதிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள் மூலம், தமிழகத்தில் வசிக்கும் அகதிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையிலும், அவர்கள் இந்த மனநிலையை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
 
உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த இலங்கை அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் செயல் குறித்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் கவலை கொண்டுள்ளனர். இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் தன்னாட்சி முற்றிலுமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
 
அவர்களை சொந்த நாட்டிலேயே, அவமரியாதைக்கு உட்படுத்தவோ, தொல்லை கொடுக்கவோ கூடாது. இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படக்கூடாது. அதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, நம்பிக்கை உருவாக்கப்பட்டு, அகதிகள் தாங்களாகவே முன்வந்து நாடு திரும்ப ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
 
இலங்கை அரசால் உறுதியான நம்பத்தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ் அகதிகளுக்கு போதிய உறுதிமொழிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் தாயகம் திரும்ப நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.
 
இந்த சூழ்நிலையில், இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே நாடு திரும்புவது குறித்து நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டம் அவசியமற்றது என தமிழக அரசு கருதுகிறது. எனவே தற்போதைய நிலையில் இந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஓ. பன்னீர்செல்வம கூறியுள்ளார்.